உள்ளூர் செய்திகள்

காரில் கடத்திய குட்காவை 22 கி.மீ. விரட்டி பிடித்த போலீசார்

Published On 2022-08-09 08:42 GMT   |   Update On 2022-08-09 08:43 GMT
  • 42 மூட்டைகளை மீட்டனர்
  • சினிமா பாணியில் அதிரடி காட்டிய தனிப்படை

வேலூர்:

வேலூர் மாவட்டம் வழியாக குட்கா பான் மசாலா கஞ்சா கடத்தலை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரும் குட்கா பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு பள்ளிகொண்டா சோதனை சாவடி அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படையினர் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது கார் ஒன்று வேகமாக வந்தது. அதனை போலீசார் மறித்தனர். போலீசாரை கண்டதும் கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரது வாகனத்தில் காரை விரட்டி வந்தனர்.

தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் நோக்கி வந்த கார் கந்தனேரி கூட்ரோட்டில் உள்ளே சென்றது.

அதனை போலீசார் பின்தொடர்ந்து விரட்டி வந்தார். மூலை கேட், ஊசூர், அரியூர் வழியாக கார் வேகமாக வந்தது. அதை விரட்டி வந்த போலீசார் தொரப்பாடி எம்.ஜி.ஆர்.சிலை அருகே காரை மடக்கி பிடித்தனர்.

அதிலிருந்த டிரைவர் வாரணாசி ஹரகுவா பகுதியை சேர்ந்த ராகுல் சுக்கா (வயது 24) என்பது தெரிய வந்தது. காரில் சோதனை நடத்திய போது 42 மூட்டை குட்கா, பான் மசாலா இருந்தது. இதனை கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது.

கஞ்சா மூட்டைகளை காருடன் பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராகுல் சுக்காவை கைது செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பாக்கெட்டுகள் மதிப்பு ரூ.3 லட்சத்திற்கு மேல் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

சினிமா பாணியில் 22 கிலோமீட்டர் தூரம் காரை விரட்டி வந்து குட்காவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பாராட்டு தெரிவித்தார்.

Similar News