உள்ளூர் செய்திகள்

புல்லூர் தடுப்பணை நிரம்பி தண்ணீர் வரும் காட்சி.

பாலாற்றில் 1500 கன அடி வெள்ளம்

Published On 2022-08-06 08:54 GMT   |   Update On 2022-08-06 08:54 GMT
  • ஏரிகளில் 60 சதவீதம் மட்டும் நீர் தேக்க முடிவு
  • கிளை ஆறுகளிலும் வெள்ளம்

வேலூர்:

வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலான கனமழை பகல் மற்றும் இரவு நேரங்களில் பெய்து வருகிறது.

இதன் காரணமாக முக்கிய ஆறுகள், ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்தையொட்டி உள்ள ஆந்திர மாநில எல்லை வனப்பகுதியிலும் கனமழை பெய்து வருவதால் பாலாற்றில் வெள்ளப்பெ ருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணையில் இருந்து பாலாற்றில் 300 கன அடி அளவுக்கு தண்ணீர் வெளியேறியது.

திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றின் துணை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வாணியம்பாடி அருகேயுள்ள மண்ணாறு மற்றும் கல்லாற்றில் தலா 100 கன அடிக்கு நீர் வரத்து பாலாற்றுக்கு வந்து கொண்டிருக்கிறது.

மலட்டாற்று, அகரம் ஆறு மற்றும் கவுன்டன்யா ஆற்றில் இருந்தும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது.

இதன்மூலம், பள்ளிகொண்டா பாலாறு பாலம் பகுதியில் 1,400 கன அடி அளவாகவும், வேலூர் பாலாறு பாலம் பகுதியில் 1,500 கன அடி அளவாகவும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் பாலாற்றின் வெள்ள அளவு 2,000 கன அடியாக உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் நீர்வ ளத்துறை அதிகாரிகள் பாலாற்றின் வெள்ள அளவை தொடர்ந்து கண்கா ணித்து வருகின்றனர்.

குடியாத்தம் மோர்தானா அணை ஏற்கெனவே முழு கொள்ளளவை எட்டிய நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் அணைக்கு வரும் நீர்வரத்து அனைத்தும் அப்படியே கவுன்டன்யா ஆற்றில் 400 கன அடி அளவுக்கு வெளியேறி வருகிறது.

ஜிட்டப்பள்ளி அணை பகுதியில் இருந்து இடது கால்வாய் வழியாக தண்ணீரை கே.வி.குப்பம் தொகுதியில் உள்ள ஏரிகளுக்கு திருப்பிவிட்டுள்ளனர். ஆனால், பாலாற்றில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீரை திருப்பிவிட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தற்போது பெய்து வரும் மழையால் கிடைக்கும் வெள்ள நீர் முழுவதும் பாலாறு வழியாகவே வெளியேறி வருகிறது.

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ''ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துக்கு வடகிழக்கு பருவமழையால் அதிகப்படியான நீர்வரத்து இருக்கும். அந்த நேரத்தில் ஏரிகள் நிரம்பி இருந்தால் வெள்ளத்தால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். எனவே, வரும் அக்டோபர் மாதம் வரை ஏரிகளில் 60 சதவீதத்துக்கு மேல் நீர் இருப்பு வைத்திருக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

பாலாற்றில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீரை திருப்பிவிடவில்லை. மோர்தானா அணையின் இடது கால்வாய் வழியாக மட்டும் நீர் இருப்பு குறைவாக உள்ள கே.வி.குப்பம் தொகுதி ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது'' என்றனர்.

Tags:    

Similar News