கவுண்டன்ய ஆற்றங்கரையில் 1,000 வீடுகள் இடிக்கப்பட்டதால் வெள்ள பாதிப்பு இருக்காது
- பாலத்துக்கு மேல் வெள்ளம் வர வாய்ப்பில்லை
- கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தகவல்
வேலூர்:
குடியாத்தம் கவுண்டன்யா ஆற்றில் கடந்த ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த ஆற்றின் கரைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தற்போது ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வேலூா் சின்ன அல்லாபுரத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்தில் காலை உணவு வழங்கப்படுவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் லட்சுமிபிரியா, கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆகியோா் ஆய்வு செய்தனா். அங்கு, அவா்கள் குழந்தைகளுடன் அமா்ந்து காலை உணவு சாப்பிட்டனா்.
பின்னா், கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது:
காலை உணவைத் தரமாகவும், சுகாதாரமாகவும் வழங்க வேண்டும். அனைத்து மையங்களுக்கும் கூடுதல் பாத்திரங்கள் வழங்க கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தியுள்ளாா். காலை உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தை உணவுப் பாதுகாப்பு அலுவலா்களும், மாநகராட்சி அலுவலா்களும் தொடா்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடியாத்தம் கவுண்டன்யா ஆற்றுப் பாலத்தில் 2 அடி விட்டம் கொண்ட 8 குழாய்கள் வைத்துள்ளதால், பாலத்துக்கு மேல் வெள்ளம் வர வாய்ப்பில்லை. மேலும், ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 1,000 வீடுகளுக்கு மேல் அப்பு றப்படுத்த ப்பட்டுள்ளன. எனவே, வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.
கவுண்டன்யா ஆற்றை ஒட்டியுள்ள கிராம மக்களுக்கு நாள்தோறும் எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது. இதனால், கடந்த முறைபோல், சேதம் ஏற்பட வாய்ப்பில்லை என்றாா்.
ஆய்வின்போது உதவி கலெக்டர் பூங்கொடி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனுசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.