உள்ளூர் செய்திகள்

சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

400 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளகவி கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணி

Published On 2022-07-22 04:01 GMT   |   Update On 2022-07-22 04:01 GMT
  • வெள்ளகவி மலைப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்த போதும் அக்கிராமத்திற்கு 400 ஆண்டுகள் கடந்தும் சாலை வசதி செய்யப்படவில்லை.
  • 400 ஆண்டுகளாக சாலைவசதி இல்லாத கிராமத்திற்கு தற்காலிக தீர்வாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொடைக்கானல்:

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பாக வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் ஆங்கிலேயர்கள் ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானல் கண்டறியப்பட்டது.

அவர்கள் கொடைக்கானலை சென்றடைய கும்பக்கரை அருவி வழியாக வெள்ளகவி ஊராட்சியை கடந்து வட்டக்கானல் வழியாக கொடைக்கானலை கண்டறிந்தனர்.

கொடைக்கானலில் மிகப்பழமையான ஊராட்சி வெள்ள கவி ஆகும். ஆனால் பழமை வாய்ந்த இந்த கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்த போதும் அக்கிராமத்திற்கு 400 ஆண்டுகள் கடந்தும் சாலை வசதி செய்யப்படவில்லை.

இதனால் இப்பகுதி மக்கள் உங்கள் தொகுதியில் முதல்-அைமச்சர் பிரிவிற்கு தொடர்ந்து மனுக்கள் அளித்ததனர். இக்கிராம மக்கள் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சுமார் 9 கி.மீ நடந்தே வந்து கொடைக்கானல் அல்லது பெரியகுளம் பகுதிகளில் தேவையான பொருள்களை வாங்கி தலைச் சுமையாக சுமந்து செல்வதும், விலை நிலங்களில் பயிரிட்ட பயிர் வகைகள், பழங்கள் ஆகியவற்றை தலைச்சுமையாக சுமந்து சென்று விற்று அதன் மூலம் வரும் வருவாயைக் கொண்டு குடும்பம் நடத்தி வருகின்றனர்.

அதிக அளவு நோய்வாய்ப்பட்டவர்களை டோலி கட்டி சுமந்தே செல்வதும், மருத்துவமனையை சென்றடைவதற்கு முன்பாகவே பல உயிரிழப்புகள் ஏற்படுவதும் வாடிக்கையாகவே இருந்தன. பெண்கள் இதனால் அதிக அளவில் உயர் கல்வி கற்க இயலாமல் ஆரம்பக் கல்வியோடு வீட்டிலேயே முடங்கினர்.

இதுகுறித்து பழனி எம்.எல்.ஏ செந்தில் குமாரிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், மற்றும் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தினேஷ்குமார் ஆகியோர் தொடர் நடவடிக்கைகள் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தீவிர நடவடிக்கையின் காரணமாக, வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது.

ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு முதல் கட்டமாக கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா மற்றும் ஒன்றிய குழு தலைவர் சுவேதா ராணி கணேசன் ஆகியோர் மேற்பார்வையில் சாலை அளவீடு செய்யும் பணியும் மண் சாலை அமைத்தல் பணியும் நடைபெற்று வருகிறது.

வெள்ள கவி கிராமத்திற்கு மண் சாலையை தார்ச் சாலையாக மாற்றிதர வேண்டும் என இப்பகுதி மக்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இருந்தபோதும் கடந்த 400 ஆண்டுகளாக சாலைவசதி இல்லாத கிராமத்திற்கு தற்காலிக தீர்வாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

Similar News