தென்காசி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்ட வேன் டிரைவர்கள்-உரிமையாளர்கள்
- தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
தென்காசி:
பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், சுரண்டை, கடையநல்லூர், கடையம், இடைகால், ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அனைத்து ஓட்டுநர் நல சங்கத்தை சேர்ந்த வேன் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகை யிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், வரி உயர்வு சம்பந்தமாக தெளிவு வேண்டும், ஆயுள் வரியை 15 ஆண்டுகளாக நீட்டிக்க வேண்டும், சொந்த பயன்பாடு வாகனங்களை வாடகைக்கு ஓட்டுவதை கண்டிக்க வேண்டும், ஆன்லைன் அபராதங்களை தடை செய்தல், சாலை வரிகளை கட்டுவதற்கு கால அவகாசம் அளித்தல், சாலை வரிகளை கட்டிய வாகனங்களுக்கு எப்.சி. காட்டுவதற்கு கால அவகாசம் வழங்குதல் உள்ளிட்ட தங்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.
அவர்களுடன், தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க ஆர்.டி.ஓ. அலுவலக அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். ஆர்ப்பாட்டத்தில் பாவூர்சத்திரம் பகுதி மோட்டார் வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கத்தின் தலைவர் ஆறுமுகம், பொருளாளர் ஆனந்த், செயலாளர் தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.