பூண்டி ஏரியில் இருந்து இதுவரை 1 டி.எம்.சி. தண்ணீர் வீணானது
- பூண்டி ஏரியில் இருந்து 450 கன அடிவீதம் நீர் வெளியேற்றப்படுகிறது.
- கடந்த மாதம் முதல் உபரிநீர் வீணாக கடலில் போய் சேர்ந்து கொண்டிருக்கிறது.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். கடந்த மாதம் வடகிழக்கு பருவமழையின் போது பெய்த பலத்த மழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகி முழு கொள்ளளவை எட்டியது.
இதையடுத்து கடந்த மாதம் 12-ந் தேதி உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டது. பின்னர் நீர்மட்டம் குறைந்ததால் உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த திடீர் மழையாலும் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது.
இதையடுத்து பூண்டி ஏரியில் இருந்து 450 கன அடிவீதம் நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் ஏரிக்கு தொடர்ந்து 450 கனஅடி தண்ணீர் இன்னும் வந்து கொண்டு இருக்கிறது.
கடந்த மாதம் முதல் உபரிநீர் வீணாக கடலில் போய் சேர்ந்து கொண்டிருக்கிறது. சுமார் 1 டி.எம்.சி. தண்ணீர் இப்படி வீணாக கடலில் போய் சேர்ந்துள்ளது. இது சென்னை மக்களின் ஒரு மாத குடிநீர் தேவை ஆகும்.
புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளும் நிரம்பி உள்ளதால் பூண்டி ஏரியில் இருந்து இந்த ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்ப முடியாத நிலை உள்ளதால் உபரிநீராக வெளியேற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பலத்த மழையின் போது பூண்டி ஏரி நிரம்பும் போதெல்லாம் உபரி நீர் வீணாக கடலில் போய் சேர்ந்து கொண்டிருக்கிறது. புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து திறந்து விடும் தண்ணீரும் வீணாக கடலில் போய் சேர்ந்து கொண்டிருக்கிறது.
இதனை கருத்தில் கொண்டு உபரி நீரை சேமிக்கும் வகையில் புதிய திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.