உள்ளூர் செய்திகள்

மத்திய இணை மந்திரி எல்.முருகன் 

அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் தருகிறது: மத்திய இணை மந்திரி தகவல்

Published On 2022-06-10 17:56 GMT   |   Update On 2022-06-10 17:56 GMT
  • டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வழியாக அரசின் நலத் திட்டங்கள் மக்களை சென்று சேர்ந்துள்ளன.
  • 2014 ஆம் ஆண்டுக்கு பிறகுதான் மீன் வளத்துறைக்கு ஒரு தனி அமைச்சகமே உருவாக்கப்பட்டது.

ஓசூர்:

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மத்திகிரியில் ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை பண்ணையை நேரில் பார்வையிட்டார்.

பண்ணையில் உள்ள கால்நடைகள் , அதற்கான உணவுப் பயிர்கள், மருத்துவர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட ஆகியவை குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். பின்னர் காங்கேயம் வகை உள்ளிட்ட உயர் வகை காளைகள் வளர்க்கும் மையத்தை பார்வையிட்டார்.

தொடர்ந்து இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

மத்திய அரசின் 8 ஆண்டு சாதனைகள் இந்தியா முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வழியாக அரசின் நலத் திட்டங்கள் இடைத் தரகர்கள் இன்றி மக்களை சென்று சேர்ந்துள்ளன.

ஏழைமக்கள் பயன்பெறும்வகையில், ஜன் தன் வங்கிக் கணக்கு, விவசாயிகள் கெளரவ நிதி, இலவச எரிவாயு இணைப்பு, சுகாதாரமான குடிநீர், கழிப்பிடங்கள், 5 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு உள்பட பல்வேறு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

நாட்டில் கப்பல் போக்குவரத்து, விண்வெளி என அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டுக்கு பிறகுதான் மீன் வளத்துறைக்கு ஒரு தனி அமைச்சகமே உருவாக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட ரூ. 32 ஆயிரம் கோடி இந்தத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை காசிமேடு துறைமுகம் உலக அளவில் நவீனப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. 100 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தில் நாட்டை உலக அளவில் வல்லரசாக்கும் திட்டத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News