உள்ளூர் செய்திகள்

விபத்தில் பலியான டிரைவர் தினேஷ், நவநீதா.

சூளகிரி அருகே நள்ளிரவில் டயர் வெடித்து விபத்து: லாரி மீது கார் மோதி டிரைவர்-பெண் நசுங்கி சாவு -கணவர், 2 குழந்தைகள் படுகாயம்

Published On 2022-11-12 15:10 IST   |   Update On 2022-11-12 15:10:00 IST
  • எதிரே வந்த கண்டைனர் லாரி மீது கார் மோதி நசுங்கியது
  • இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்

சூளகிரி,

ஒசூர் நேருநகர் பகுதியை சேர்ந்தவர் காந்தி (வயது 48). ஆசாரி வேலை பார்த்து வருகிறார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டு விசேஷத்திற்கு செல்ல முடிவு செய்த காந்தி நேற்று இரவு தனது மனைவி நவநீதா (40),குழந்தைகள் பிரதீபாஸ்ரீ,கோகுலன் ஆகியோருடன் வாடகை காரில் புறப்பட்டுள்ளார்.

காரை ஓசூர் ஆர்.கே.நகரை சேர்ந்த தினேஷ்(32) என்பவர் ஓட்டி சென்றார். நள்ளிரவு 2 மணியளவில் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்னப்பள்ளி என்ற இடத்தருகே சென்றபோது திடீரென கார் டயர் வெடித்தது. இதில் நிலைதடுமாறிய கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவரை தாண்டி எதிர் சாலைக்கு சென்றது. அப்போது எதிரே வந்த கண்டைனர் லாரி மீது கார் மோதி நசுங்கியது.

இதில் கார் டிரைவர் தினேஷ்,காந்தியின் மனைவி நவநீதா இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.காந்தி மற்றும் குழந்தைகள் ஆகிய 3 பேரும் காருக்குள் சிக்கி உயிருக்கு போராடினர்.

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பினர்.

இடிபாடுகளில் சிக்கிய காந்தி,பிரதீபாஸ்ரீ ,கோகுலன் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் ஜே.சி.பி.எந்திரம் விபத்தில் சிக்கிய காரை சாலையிலிருந்து அகற்றினர்.

இந்த விபத்தால் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News