உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே பான் எண் இருவருக்கு வழங்கப்பட்ட வினோதம்

Published On 2023-03-06 02:05 GMT   |   Update On 2023-03-06 05:15 GMT
  • ஒருவர் டில்லி. மற்றொருவர் டில்லிபாபு என பெயர் மட்டுமே வித்தியாசம்.
  • ஒரே பெயர், பிறந்த தேதியால் இந்த குளறுபடி நடந்திருக்கலாம் என தெரிகிறது.

மாமல்லபுரம்

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் டில்லி (வயது 41). இவர், மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி அரசு மேல்நிலைப்பள்ளியில் வேலை செய்து வருகிறார். இவர், 2019-ம் ஆண்டு தன்னுடைய மாத சம்பளம் மற்றும் வங்கி தேவைக்காக பான் கார்டுக்கு விண்ணப்பித்து பான் எண் பெற்றார். இவர் திருக்கழுக்குன்றம் ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். வங்கி கணக்குடன் ஏற்கனவே பான் எண்ணை இணைத்துள்ளார்.

இந்த நிலையில் டில்லி ஆதார் எண் மற்றும் பான்கார்டு எண் போன்றவற்றில் உள்ள எழுத்து வித்தியாசத்தை சரி செய்யவும், வங்கி கணக்கு எண்ணில் செல்போன் எண்ணை மாற்றவும், தற்போது வங்கியில் கடிதம் மூலம் விண்ணப்பித்து இருந்தார். அவரது பான் எண் பிழையாக உள்ளதாக வங்கி இணையதள சர்வர் காட்டுவதாக வங்கி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பிழை குறித்து மேலும் விசாரித்தபோது அவரது பெயரையே கொண்டுள்ள வேறு நபருக்கும் அதே பான் எண் வழங்கப்பட்டுள்ளதாக வங்கி தரப்பில் தெரிவித்துள்ளனர். வங்கி தரப்பினர் வேறு நபரின் செல்போன் எண்ணை தெரிந்து அவரிடம் இது குறித்து விசாரித்தனர்.

இதில் அவர் திருக்கழுக்குன்றம் அடுத்த அம்மணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தபால் துறை ஊழியரான டில்லிபாபு (21) என்பது தெரிய வந்தது. ஒருவர் டில்லி. மற்றொருவர் டில்லிபாபு என பெயர் மட்டுமே வித்தியாசம். இருவரது தந்தை பெயரும் ஒரே பெயர், இருவரும் ஒரே நாளில் பிறந்துள்ளனர். கல்வித்துறை ஊழியர் டில்லி பான் எண் பெறும் முன்பே, கடந்த 2008-ம் ஆண்டு டில்லிபாபுவுக்கு பான் எண் வழங்கப்பட்டுள்ளது. 11 ஆண்டுகள் கடந்து டில்லிக்கும் அதே பான் எண் அளிக்கப்பட்டுள்ளது வினோதமாக உள்ளது.

இதையடுத்து கல்வித்துறை பணியாளர் டில்லி, வருமான வரித்துறை பணியாளர்களின் அலட்சியபோக்கால் இப்படி ஒரே பான் எண் இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. தனக்கு உடனடியாக வேறு பான் எண் வழங்கக்கோரி இ.மெயில் மூலம் வருமான வரித்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

Tags:    

Similar News