தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தும், ேஜ.சி.பி. எந்திரம் மூலமும் தீயை அணைக்கும் காட்சி.
நெல்லை மாநகராட்சி குப்பை கிடங்கில் தீயை அணைக்க 3-வது நாளாக போராட்டம்
- காற்றின் வேகத்தால் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
- தீ காரணமாக எழுந்த புகையானது மாநகரில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பரவியது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் சேகரிக்கப்படும் சுமார் 110 டன் குப்பைக் கழிவுகள் நெல்லையை அடுத்த ராமையன்பட்டியில் உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படும்.
தீ விபத்து
அவ்வாறு கொண்டு செல்லப்படும் குப்பைகள் ஒரு சில நேரங்களில் தீப்பிடித்து எரிந்து விடும். இந்நிலையில் இந்த குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் திடீரென தீப்பற்றியது.
காற்றின் வேகத்தால் மளமளவென பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் பாளை மற்றும் பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
5 கிலோ மீட்டர் தூரத்திற்கு புகை மூட்டம்
இதற்கிடையே இந்த பயங்கர தீ காரணமாக எழுந்த புகையானது மாநகரில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பரவியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மூச்சுத் திணறல் காரணமாக அவதிப்பட்டனர்.
நேற்று 2-வது நாளாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டு வந்தனர்.
சாலைமறியல்
இந்நிலையில், தீயை உடனடியாக அணைக்க வலியுறுத்தி ராமை யன்பட்டி பஞ்சாயத்து தலைவர் டேவிட் தலைமையில் அந்த பகுதி பொதுமக்கள் திடீரென மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அப்போது ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் இதுபோன்ற நிலை ஏற்படுவதாகவும், சிலர் வேண்டுமென்றே தீ வைப்பதாக வும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மறியலில் ஈடுபட்ட வர்களுடன் மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
3-வது நாளாக தீ அணைக்கும் பணி
இதற்கிடையே தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. நேற்று இரவு பெரும்பாலான இடங்களில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
எனினும், ஒரு சில பகுதிகளில் எரிந்து வரும் தீயை அணைக்கும் முயற்சியில் இன்று 3-வது நாளாக தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடு பட்டு வருகின்றனர்.
சில இடங்களில் புகை மூட்டம் தொடர்ந்து காணப்படு வதால் பொதுமக்கள் அவதி யடைந்துள்ளனர். எனவே குப்பை கிடங்கில் தீயை முழுமையாக அணைக்கும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக புகை வரும் இடங்களில் ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக மண் அள்ளி வந்து கொட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
3-வது நாளாக தொடரும் புகைமூட்டம்.