உள்ளூர் செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து குறைந்தது

Published On 2022-11-13 09:51 GMT   |   Update On 2022-11-13 09:51 GMT
  • மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து குறைந்ததால் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பும் சரிந்துள்ளது
  • இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி மழை நீர் வரத்து 17 ஆயிரம் கனஅடியாக குறைந்திருப்பதாக முக்கொம்பு நீர்வள ஆதாரத்துறையினர் தெரிவித்தனர்


திருச்சி:

மேட்டூர் அணையிலிருந்து தற்போது வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இந்த நிலையில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

எனவே ஆங்காங்கே பெய்யும் மழை நீரும் காவிரியில் சங்கமிப்பதால் காவேரி நீர் வரத்து உயர்ந்தது. நேற்றைய தினம் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட 15 ஆயிரம் கன அடி நீர் மற்றும் 22,000 கன அடி மழை நீர் முக்கொம்பு மேலணைக்கு வந்தது.

அதைத்தொடர்ந்து 5000 கன அடி நீர் காவிரி ஆற்றிலும், மீதமுள்ள 32 ஆயிரம் கன அடி நீர் கொள்ளிடம் ஆற்றிலும் திறந்து விடப்பட்டது.

இந்த நிலையில் நேற்றைய தினம் மழையின் வேகம் குறைந்ததால் நீர்வரத்தும் சரிந்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி மழை நீர் வரத்து 17 ஆயிரம் கனஅடியாக குறைந்திருப்பதாக முக்கொம்பு நீர்வள ஆதாரத்துறையினர் தெரிவித்தனர்.

இதில் வழக்கம்போல் 5000கன அடி நீர் காவிரி ஆற்றிலும், மீதமுள்ள 27 ஆயிரம் கன அடி நீர் கொள்ளிடத்திலும் திறந்து விடப்படுகிறது.

இந்த நிலையில் முக்கொம்பு மேலனை நீர்வரத்தினை கலெக்டர் பிரதீப் குமார் பார்வையிட்டு நீர்வளத்துறை அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். அதன் பின்னர் முத்தரசநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைப்பினை சரி செய்ய உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து அதிகாரிகள் அங்கு முகாமிட்டு குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

கலெக்டர் ஆய்வின்போது கூட்டு குடிநீர் திட்ட நிர்வாக பொறியாளர் ராஜசேகர், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் நாக ஆனந்த், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் முருகானந்தம், தாசில்தார் குணசேகரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.




Tags:    

Similar News