உள்ளூர் செய்திகள்

மதில் மேல் பூனையாக தவித்த அ.தி.மு.க. நிர்வாகி எடப்பாடி அணியில் ஐக்கியம்

Published On 2022-07-19 09:01 GMT   |   Update On 2022-07-19 09:01 GMT
  • மதில் மேல் பூனையாக தவித்த அ.தி.மு.க. நிர்வாகி எடப்பாடி அணியில் ஐக்கியமாகி வருகின்றனர்.
  • சரியும் பலத்தால் எதிர்காலம் தேடும் ஓ.பி.எஸ். ஆதரவு தொண்டர்கள்

திருச்சி:

ஒற்றை தலைமை விவகாரத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம். இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் கடந்த 11-ந்தேதி சென்னை வானரகத்தில் நடந்த அ.தி.மு.க. பொது குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்கள் மூலமாக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அந்த பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

மேலும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், அணி நிர்வாகிகள் தொடர்ச்சியாக நீக்கப்பட்டு வருகின்றனர். இதில் திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அவரது மகன் ஜவகர் உள்ளிட்டோரும் தப்பவில்லை.

இது ஒருபுறம் இருக்க தனக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்புடன் கைகோர்த்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை பன்னீர் செல்வமும் நீக்கி வருகிறார். மேலும் தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ததை செல்லாது என அறிவிக்க கேட்டு நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணைய படிக்கட்டுகளில் அவர் ஏறிக் கொண்டிருக்கிறார்.

இந்த தொடர் பிரச்சனையால் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர். இதற்கிடையே சென்னையில் சென்ற மாதம் 23-ந்தேதி நடைபெற இருந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்த திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. துணை செயலாளர் பத்மநாபன், பின்னர் 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் பங்கேற்கவில்லை. ஓ.பி.எஸ். தரப்பினை ஆதரித்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மனம் மாறிய பத்மநாபன், மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஜெ.சீனிவாசனுடன் சேலம் சென்று எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து ஐக்கியமானார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பத்மநாபன், அமைச்சர் கே.என்.நேருவை எதிர்த்து திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய நிலையில் மாநகர் மாவட்டத்தில் உள்ள 18 பொதுக்குழு உறுப்பினர்களில் 16 பேர் எடப்பாடியை ஆதரிக்கின்றனர். வெல்லமண்டி நடராஜன், பொருளாளர் மனோகர் ஆகிய இரண்டு பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே ஓ.பி.எஸ். அணியில் இருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிச்சாமியின் பலம் மேலும் கூடிக்கொண்டே செல்வதால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அ.தி.மு.க.வில் தங்களுக்கான எதிர்காலம் இருக்கிறதா என்பதையும் அவர்கள் தேட தொடங்கியுள்ளனர்.

Tags:    

Similar News