உள்ளூர் செய்திகள்

காவிரி பாலத்தில் இரவு, பகலாக நடைபெறும் சீரமைப்பு பணிகள்

Published On 2022-09-23 08:56 GMT   |   Update On 2022-09-23 08:56 GMT
  • காவிரி பாலத்தில் இரவு, பகலாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது
  • தேவைக்கு ஏற்ப கூடுதல் பணியாட்களை ஈடுபடுத்த முடிவு

திருச்சி:

திருச்சி மாநகரையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் 45 ஆண்டு கால பழமையான சிந்தாமணி காவிரி பாலம் வலுவிழந்ததைத் தொடர்ந்து அப்பாலத்தை ரூ.7 கோடியில் பராமரிப்பு செய்து புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த 10-ந்தேதி நள்ளிரவு பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு 11-ந்தேதி காலை முதல் பணிகள் நடந்து வருகிறது. பாலததில் ஓரமாக இருசக்கர வாகனங்கள் போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

பணிகள் தொடங்கி 12 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பணிகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை வட்டாரங்களில் கூறியதாவது :-

இப்போது ஆரம்ப கட்டப்பணிகள் நடந்து வருகிறது. பாலத்தில் உள்ள ஒவ்வொரு இணைப்புகளுக்கும் இடையே புதிய ராடுகள் பொருத்த துளையிட்டு பழைய ராடுகளை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.

இதுபோன்று 32 இணைப்புகளில் பழைய ராடுகளை அகற்ற வேண்டும். தொடர்ந்து பாலத்திற்கு அடியில் உள்ள பேரிங்குகள் சீரமைத்து பொருத்தும் பணி உள்ளிட்ட அடுத்தடுத்த பணிகள் நடைபெறும்.

இப்பணிகள் இரவு, பகல் என 24 மணி நேரமும் நடந்து வருகிறது. இப்போதைக்கு 50 நபர்கள் 2 ஷிப்டுகளாக பணியாற்றி வருகின்றனர். பணிகள் மற்றும் ேதவைகளுக்கேற்ப கூடுதல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இப்பராமரிப்பு பணி நிறைவடைய 5 மாதங்கள் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் முடிந்த வரை முன்னதாகவே பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்ப பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணியின் போது இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் சிரமமாக இருந்தாலும், அவற்றை சமாளித்து தான் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றனர். 

Tags:    

Similar News