கோவை கார் வெடிப்பு-அண்ணாமலையிடம் விசாரிக்க வலியுறுத்தல்
- கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உண்மை நிலையை அறிய பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் விசாரணை நடத்த தமிழக மக்கள் ஜனநாயக கட்சி கோரிக்கை விடுத்துள்ளது
- நீண்ட கால சிறைவாசிகளின் மனிதாபிமான விடுதலையை தடுக்கும் நோக்கில் இது நடந்துள்ளதாக ஜனநாயக சக்திகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது
திருச்சி:
தமிழக மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் கே.எம்.ஷரீப் கூறியதாவது:-
கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை ஒரே நாளில் மாறுதல் செய்து புதிய பிரிவுகளின்படி வழக்கை பதிவு செய்துள்ளனர். உண்மையில் இச்சம்பவம் பயங்கரவாத சிந்தனையோடு நடத்தப்பட்டிருந்ததால் காவல்துறை கடும் நடவடிக்கை எடுப்பதை யாரும் ஆட்சேபிக்க முடியாது.
ஆனால் பல்வேறு முற்போக்கு சக்திகள் ஆயுள் சிறை வாசிகள் விடுதலைகோரி போராட்டங்கள் நடத்திவரும் சூழலில் இந்த சம்பவம் நடந்திருப்பது பல்வேறு வகையான சந்தேகங்களை எழுப்பியுள்ளது. நீண்ட கால சிறைவாசிகளின் மனிதாபிமான விடுதலையை தடுக்கும் நோக்கில் இது நடந்துள்ளதாக ஜனநாயக சக்திகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, காவல்துறைக்கு தெரியாத பல செய்திகளை தெரிவிக்கிறார். எனவே தமிழக அரசு அண்ணாமலையிடமும் விசாரித்து உண்மை குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.