உள்ளூர் செய்திகள்

வரலாறு காணாத மழை பெய்தும் வறண்டு கிடக்கும் கொளக்குடி ஏரி - தண்ணீர் கொண்டு வர போராடும் விவசாயிகள்

Published On 2022-10-21 15:09 IST   |   Update On 2022-10-21 15:09:00 IST
  • தொட்டியத்தை அடுத்த கொளக்குடியில் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய ஏரியாக கொளக்குடி ஏரி அமைந்துள்ளது.
  • இந்த ஏரி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக பெய்த மழையின்ேபாது நிரம்பியது. அதன்பிறகு தற்போது வரை ஏரிக்கு தண்ணீர் வரத்தின்றியே காணப்படுகிறது.

திருச்சி

திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த கொளக்குடியில் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய ஏரியாக கொளக்குடி ஏரி அமைந்துள்ளது. சுமார் 360 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த ஏரி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக பெய்த மழையின்ேபாது நிரம்பியது. அதன்பிறகு தற்போது வரை ஏரிக்கு தண்ணீர் வரத்தின்றியே காணப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அனைத்து மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது. பற்றாக்குறைக்கு பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உபரிநீர் கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் இந்த கொளக்குடி ஏரி இன்றளவும் பாலைவனமாகவே காட்சி தருகிறது. இந்த ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர கடந்த மாதம் 12-ந்தேதி கொளக்குடியில் இருந்து நடைபயணமாக சென்று அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் திருச்சி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரிடமும் இது குறித்து கொளக்குடி பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு கொளக்குடி பகுதிகளில் விளையும் மிளகாய், தமிழகத்தின் பிரபலமான ஒன்றாகும். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து அதனை வாங்கிச் செல்வது வழக்கம். தற்பொழுது மிக சொற்ப அளவே மிளகாய் பயிரிடப்படுகின்றது.

மேலும் இப்பகுதியில் நெல், வாழை, கரும்பு மற்றும் காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது. கொளக்குடி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர இப்பகுதி விவசாயிகள் அருகில் உள்ள முள்ளிப்பாடி வாய்க்காலை தூர்வாரி அதிலிருந்து சுமார் இரண்டரை கிலோ மீட்டர் கால்வாய் அமைத்து கொளக்குடி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வருவது மிக எளிதான ஒரு வழி வகையாக தெரிவித்துள்ளனர்.

இல்லையெனில் காவிரியில் துணை வாய்க்கால் அமைத்து இந்த ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்தால் இப்பகுதியில் உள்ள சுமார் 4,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், இந்த ஏரியை சுற்றியுள்ள ஊராட்சிகளின் குடிநீருக்கு தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும்.

அத்துடன் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து விவசாயிகளுக்கும் பயனளிக்கும் இந்த ஏரிக்கு நீர் கொண்டுவர கொளக்குடி மற்றும் அப்பண்ணநல்லூர் ஊராட்சிகளில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். தற்பொழுது மழையினால் இரண்டு லட்சத்திற்கு மேலான கனஅடி நீர் வீணாக காவிரியில் கலந்து வரும் சூழலில் கொளக்குடி விவசாயிகளின் கோரிக்கையான ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்பதே ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு உடன் நடவடிக்கை எடுத்து விவசாயிகளையும், விவசாயத்தையும் காக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News