உள்ளூர் செய்திகள்

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் மேயர் - அதிகாரிகளை கண்டித்து தி.மு.க. கவுன்சிலர் வெளிநடப்பு

Published On 2022-10-28 09:42 GMT   |   Update On 2022-10-28 09:42 GMT
  • திருச்சி மாநகராட்சி சாதாரண மற்றும் அவசரக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் நடந்தது.
  • அவசரக் கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முதல் நான்கு தீர்மானங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

திருச்சி

திருச்சி மாநகராட்சி சாதாரண மற்றும் அவசரக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் நடந்தது. இதில் துணை மேயர் திவ்யா, கமிஷனர் வைத்திநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்ககா தேவி, ஆண்டாள் ராம்குமார், மதிவாணன், ஜெயநிர்மலா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

அவசரக் கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முதல் நான்கு தீர்மானங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

சுரேஷ் (சி.பி.ஐ.):-

மாமன்றத்தில் கவுன்சிலர்களை தலைவர்களாகக் கொண்ட வார்டு குழுக்கள் மற்றும் பகுதி சபாக்கள் உருவாக்கிடவும், இதர உறுப்பினர்களை மாமன்றம் நியமனம் செய்திடவும், வார்டு குழுக்கள் மற்றும் பகுதி சபாக்கள் கூட்டங்கள் நடத்திடவும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அது நடைமுறைக்கு வரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறோம். அரசு இதனைமறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இதே கருத்தை வலியுறுத்தி கவுன்சிலர்கள் முத்து செல்வம், காஜாமலை விஜய் ஆகியோரும் பேசினர்.

மேயர் அன்பழகன்: உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறோம். கடிதம் எழுதி கவுன்சிலர்களின் கையெழுத்துக்கள் மூலம் மறுபரிசலனை செய்யுமாறு அரசை வலியுறுத்துவோம்.

இந்த தீர்மானத்திற்கு தி.மு.க., கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து ஒட்டுமொத்த கவுன்சிலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிரபாகரன் (வி.சி.க): மாநகராட்சிகளில் துப்புரவு பணிகள், பணியாளர்கள் அவுட்சோர்சிங் முறையில் தனியார் மயமாக்கப்பட உள்ளது. ஊழியர்கள் தனியார் மயமாக்கபட்டால் பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே 10 ஆண்டுகளாக உள்ள தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். தமிழக அரசு இதற்கு செவி சாய்க்கக் கூடாது. சமூக நீதி ஆட்சி நடந்து வருகிறது. மத்திய அரசின் அவுட்சோர்சிங் தனியார் மய முறைக்கு ஒத்துக் கொள்ளக் கூடாது.

மேயர் அன்பழகன்: திருச்சி மாநகரில் தினமும் 470 டன் குப்பைகள் சேருகின்றன. அந்த குப்பைகள் தரம் பிரித்து கொடுத்தால் தான் விவசாயிகள் வாங்கிச் செல்வார்கள். சென்னையில் இந்த பணி சரியாக திட்டமிட்டு செய்யப்படுகிறது. திருச்சியை முன்மாதிரி மாநகராட்சியாக மாற்ற வேண்டும், குப்பைகள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். அதற்காக பரீட்சார்த்த முறையில் முதல் கட்டமாக இந்த முறை செயல்படுத்தப்பட உள்ளது. இது நமக்கு சரிவரவில்லை என்றால் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு பரிசீலனை செய்ய வலியுறுத்துவோம் என்றார்.

ஆனால் இதற்கும் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கொட்டப்பட்டு தர்மராஜ்: கட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் எனது வார்டு சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்திய போது தாங்கள் (மேயர்) டேப் எடுத்துக்கொண்டு அளந்து விட்டு சொல்லுங்கள் என கூறினீர்கள். நீங்கள் வந்த காலகட்டத்தில் நானும் தி.மு.க.வுக்கு வந்து விட்டேன். இந்தப் பதில் எனக்கு நக்கலாக தெரிகிறது. இதனை மாமன்றத்தில் தெரியப்படுத்தவே இங்கு பேசினேன்.

மேயர் அன்பழகன்: தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். வேலையை செய்வதற்காகத் தான் அதை சொன்னேன். கட்சிக் கூட்டத்தில் பேசியதை மன்றத்தில் பேசியது தவறான அணுகுமுறை எனக் கூறினார். இதைத்தொடர்ந்து கொட்டப்பட்டு தர்மராஜ், மேயர் மற்றும் அதிகாரிகளை கண்டித்து வெளிநடப்பு செய்தார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News