உள்ளூர் செய்திகள்

திருச்சி பகுதிகளில் சுற்றிய 50 பன்றிகள் பிடிப்பட்டன - மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

Published On 2022-09-03 09:53 GMT   |   Update On 2022-09-03 10:11 GMT
  • திருச்சி மாநகராட்சி பகுதிகளில் கால்நடைகளின் வீதி உலா, பன்றிகள் மற்றும் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
  • கோட்டை ரயில் நிலையம் மற்றும் கள்ளக்காடு பகுதிகளில் 50 பன்றிகள் பிடிக்கப்பட்டன.

திருச்சி,

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் கால்நடைகளின் வீதி உலா, பன்றிகள் மற்றும் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்துக்குள் சிக்கி படுகாயம் அடைகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலைகளில் சுற்றித்திரிந்த ஆடு, மாடுகளை மாநகராட்சி பிடித்து சென்றனர். பின்னர் அதனை மீட்க உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். இதில் அதிகபட்ச தொகை அபராதமாக விதிக்கப்பட்டதாக உரிமையாளர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் சிலர் கால்நடைகளை மீட்க முன் வராததால் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தர்ம சங்கடம் ஏற்பட்டது. பின்னர் தொடர் நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகமும் கைவிட்டது. இதற்கிடையே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் தனியாருடன் ஒப்பந்தம் செய்தது.

இதையடுத்து நேற்றைய தினம் கோட்டை ரயில் நிலையம் மற்றும் கள்ளக்காடு பகுதிகளில் 50 பன்றிகள் பிடிக்கப்பட்டன. மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, இது தொடர்பாக பலமுறை பன்றி வளர்ப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் யாரும் கண்டு கொள்வதாக தெரியவில்லை. எனவேதான் பன்றிகள் பிடிக்கப்படுகிறது என்றனர்.

பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், சாலைகளில் ஆதரவின்றி சுற்றித்திரியும் கால்நடைகள் மற்றும் நாய்களையும் பிடித்து செல்ல வேண்டும். அதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் பதிலளிக்கையில், மாநகராட்சி பகுதியில் மேலும் 3 நாய்கள் கருத்தடை மையங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன. கால்நடைகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையும் விரைவில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News