உள்ளூர் செய்திகள்

தடுப்பு கம்பிகளை தாண்டி இறந்தவரின் உடலை எடுத்து செல்லும் பொதுமக்கள்.

ஸ்ரீவைகுண்டம் அருகே இறந்தவர்களை அடக்கம் செய்ய 20 அடி பள்ளத்தில் ஆபத்தான நிலையில் பயணம்- பாதை அமைத்து தர கோரிக்கை

Published On 2023-01-08 08:05 GMT   |   Update On 2023-01-08 08:05 GMT
  • புதுக்குடி கீழூரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
  • இறந்தவர்களை சுமந்து செல்ல ஏதுவாக படிகள் அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்துங்கநல்லூர்:

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15- வது வார்டு பகுதியில் புதுக்குடி கீழூரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு என தனியாக சுடுகாடு இல்லாத நிலையில் காலம் காலமாக ஸ்ரீவைகுண்டம் புதிய பாலத்தின் மேல் பகுதியில் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் இறந்தவர்களைப் புதைத்து வருகின்றனர்.

நெல்லை, திருச்செந்தூர் பிரதான சாலை ஓரத்தில் இருந்து சுமார் 20 அடி உயரமுள்ள பள்ளத்தில் இறந்தவர்களை ஆபத்தான முறையில் சுமந்து சென்று அடக்கம் செய்து வந்தனர். இதற்கிடையில் நெடுஞ்சாலை துறையினர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பு கம்பிகளை அமைத்துள்ளனர்.

இதனால், ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி கீழூர் மக்கள் இறந்தவர்களை அடக்கம் செய்ய பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இறந்தவர்களை சுமந்து செல்பவர்களும், துக்க நிகழ்வில் பங்கேற்ப வர்களும் தடுப்புக் கம்பியை தாண்டி சுமார் 20 அடி உயர பள்ளத்தில் இறங்கி ஏறுகின்றனர்.

இந்நிலையில், இறந்தவர்களை சுமந்து செல்ல ஏதுவாக குறிப்பிட்ட தூரத்தில் மட்டும் தடுப்பு கம்பிகள் அகற்றி பள்ளத்தில் இறங்குவதற்கு வசதியாக படிகள் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கீழுரை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற வியாபாரி நேற்று உடல் நலம் இன்றி இறந்தார். அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்காக தாமிரபரணி ஆற்றின் கரையோரம் கொண்டு சென்று பெரும் சிரமங்களுக்கிடையே தடுப்பு கம்பிகளை தாண்டி 20 அடி பள்ளத்தில் அவரது உடலை சுமந்து சென்று நல்லடக்கம் செய்தனர். பொதுமக்களின் சிரமத்தை போக்க உடனடியாக தடுப்பு கம்பிகளை அகற்றி படிகள் அமைத்து தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News