உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

கொடைக்கானலில் ரோந்து வாகனம் செயல்படாததால் சுற்றுலா பயணிகள் தவிப்பு

Published On 2022-09-25 06:16 GMT   |   Update On 2022-09-25 06:16 GMT
  • மோட்டார் சைக்கிள்களில் அதிவேகத்தில் வரும் இளைஞர்கள் சாலை ஓரத்தில் நிறுத்தி இருக்கும் வாகனங்களை இடித்து தள்ளி விட்டு அதனை கண்டுகொள்ளாமல் சென்று விடுகின்றனர்.
  • விதி மீறல் பயணங்கள் மற்றும் சாகச சவாரி போன்றவை அடிக்கடி நடைபெற்று விபத்துகளும், உயிரிழப்புகளும் நடந்து வருகிறது.

கொடைக்கானல்:

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் ஏரிச்சாலை முக்கியமான பகுதியாகும். இங்கு சைக்கிள் சவாரி, குதிரை சவாரி போன்றவையும் நடைபெறும்.

வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களை ஏரிச்சாலையில் நிறுத்தி விட்டு படகு சவாரி, குதிரை சவாரி செய்வது வழக்கம்.

மேலும் சிலர் அங்குள்ள நடைமேடையில் கால்நடையாக நடந்து சென்று இயற்கை அழகை கண்டு ரசிப்பார்கள். இந்நிலையில் மோட்டார் சைக்கிள்களில் அதிவேகத்தில் வரும் இளைஞர்கள் சாலை ஓரத்தில் நிறுத்தி இருக்கும் வாகனங்களை இடித்து தள்ளி விட்டு அதனை கண்டுகொள்ளாமல் சென்று விடுகின்றனர்.

மேலும் கார்களின் கண்ணாடிகளையும் கைப்பிடிகளையும் சேதப்படுத்தி செல்வதும் வாடிக்கையாக உள்ளது. போக்குவரத்து நெரிசலாக இருக்கும் நாட்களில் வாகனங்களை எங்கு நிறுத்துவது என தெரியாமல் கிடைக்கும் இடங்களில் நிறுத்தி விட்டு சுற்றுலா பயணிகள் செல்லும் போது மீண்டும் திரும்பி வந்தால் அது சேதமடைந்த நிலையை கண்டு மனம் வருந்தி விடுகின்றனர்.

இது குறித்து யாரிடம் புகார் செய்வது என்று தெரியாமல் சேதமடைந்த வாகனங்களையே எடுத்து சென்று விடுகின்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சமயங்களிலும் விதி மீறல் பயணங்களை கண்காணிக்கவும், கொடைக்கானலில் போக்கு வரத்து காவலர்களுக்கு ரூ.23 லட்சம் மதிப்பிலான ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டது. ஆனால் அந்த வாகனங்களை போலீசார் பயன்படுத்துவதே கிடையாது.

இதனால் விதி மீறல் பயணங்கள் மற்றும் சாகச சவாரி போன்றவை அடிக்கடி நடைபெற்று விபத்துகளும், உயிரிழப்புகளும் நடந்து வருகிறது. எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News