உள்ளூர் செய்திகள்

உடுமலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

Published On 2025-01-16 12:44 IST   |   Update On 2025-01-16 12:44:00 IST
  • வனப்பகுதியில் பல்வேறு வழிகளில் ஓடிவருகின்ற ஆறுகள் இறுதியில் பஞ்சலிங்க அருவியில் ஒன்று சேர்ந்து விடுகின்றது.
  • திருமூர்த்தி அணை, அருவி மற்றும் கோவில் பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல்குருமலை, கீழ்குருமலை, குலிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் நீராதாரமாக உள்ளது. வனப்பகுதியில் பல்வேறு வழிகளில் ஓடிவருகின்ற ஆறுகள் இறுதியில் பஞ்சலிங்க அருவியில் ஒன்று சேர்ந்து விடுகின்றது.

இந்த அருவியில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி அரசு, தனியார் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது.

அதைத் தொடர்ந்து கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலையில் குவிந்து வருகின்றனர். அவர்கள் பஞ்சலிங்க அருவிக்கு சென்று இதமான கால நிலையை அனுபவித்தும் அருவியில் குளித்து புத்துணர்வும் அடைகின்றனர்.

அதுமட்டுமின்றி அருவி பகுதியில் குடும்பத்துடனும், தனியாக அமர்ந்தும் செல்பி, புகைப்படம் எடுத்து உறவினர்களுக்கு அனுப்பியும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்கின்றனர்.

இதனால் திருமூர்த்தி அணை, அருவி மற்றும் கோவில் பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. 

Tags:    

Similar News