ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்ற இன்று அதிகாலை ரயில் நிலையம் வந்தடைந்த வடமாநில பெண்கள்.
ஓசூர் தனியார் கம்பெனியில் பணியாற்ற ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து சிறப்பு ரெயில் மூலம் 800 வட மாநில இளம் பெண்கள் அழைத்து வரப்பட்டனர்
- ஓசூர் இரயில் நிலையத்திற்கு வந்த இளம் பெண்களை டாடா கம்பெனி நிர்வாகத்தினர் அங்கிருந்து அழைத்து சென்றனர்.
- அதிகாலை நேரத்தில் சிறப்புரெயிலில் 800-க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் ஒரே நேரத்தில் வந்து இறங்கியதால் ரயில் நிலையம் காலை நேரத்தில் பரபரப்பாக காணப்பட்டது.
ஓசூர்,
ஓசூர் அருகே உள்ள கெலமங்கலம் பகுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் என்ற செல்போன் உதிரி பாகங்கள் தயார் செய்யும் தனியார் கம்பெனி இயங்கி வருகிறது.
இந்த கம்பெனியில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக பிளஸ் டூ படித்த உள்ளூர் மற்றும் வெளியூர் இளம் பெண்கள் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது வட மாநில இளம் பெண்களும் வேலைக்கு அழைத்து வரப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இந்த கம்பெனியில் பணியாற்ற ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 860 வட மாநில இளம் பெண்கள் சிறப்பு இரயில் மூலம் இன்று ஓசூருக்கு அழைத்து வரப்பட்டனர்.
ஜார்கண்ட் மாநிலம் ஹடியா இரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறப்பு ெரயில் இன்று அதிகாலை ஓசூர் ெரயில் நிலையத்தை வந்தடைந்தது.
மொத்தம் உள்ள 20 ரயில் பெட்டிகளில் 10 பெட்டிகளில் இளம் பெண்கள் பயணம் செய்து வந்தனர். ஓசூர் இரயில் நிலையத்திற்கு வந்த இளம் பெண்களை டாடா கம்பெனி நிர்வாகத்தினர் அங்கிருந்து அழைத்து சென்றனர்.
அதிகாலை நேரத்தில் சிறப்பு ெரயிலில் 800-க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் ஒரே நேரத்தில் வந்து இறங்கியதால் ெரயில் நிலையம் காலை நேரத்தில் பரபரப்பாக காணப்பட்டது.
தொடர்ந்து அனைவரும் தனியார் பேருந்துகள் மூலம் அழைத்து செல்லப்பட்டு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு அதன் பின்னர் டாடா கம்பெனிக்கு வரும் 1 ஆம் தேதி முதல் பணிகளுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.
தமிழகத்தில் ஏராளமான அரசுத்துறை வேலைவாய்ப்பில் வட மாநிலத்தவர் புகுந்து வரும் நிலையில் தனியார் வேலை வாய்ப்புகளிலும் வட மாநிலத்தவர்கள் அமர்த்தப்படுவது உள்ளூர் மக்களை மட்டுமின்றி தமிழக மக்களை வேதனைடையை செய்துள்ளது.