உள்ளூர் செய்திகள்

எருது விடும் விழா நடத்தஅரசிடம் முன் அனுமதி பெற வேண்டும்

Published On 2023-01-07 15:50 IST   |   Update On 2023-01-07 15:50:00 IST
  • எருது விடும் விழா நடத்த ஒருங்கிணைப்பாளர்கள் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே விண்ணப்பம் செய்ய வேண்டும்.
  • எருது விடும் விழா நிகழச்சிகளில் ஒரு காளையுடன் உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது விடும் விழா நிகழ்ச்சியை நடத்த அரசின் முன் அனுமதி பெற்று, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

எருது விடும் விழா நிகழச்சியை 2023-ம் ஆண்டில் நடத்த அரசின் முன் அனுமதி பெறுவதுடன், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதன்படி, எருது விடும் விழா நடத்த ஒருங்கிணைப்பாளர்கள் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே விண்ணப்பம் செய்ய வேண்டும்.

அனுமதி கோரி வரப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, அரசிதழில் பதிவு செய்ய விழா நடைபெறுவதற்கு 20 நாட்களுக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட கிராமம் மற்றும் விழா நடைபெறும் நாள் ஆகியவற்றை குறிப்பிட்டு, அரசாணை பெறுவதற்கு கால்நடை பராமரிப்புத்துறை ஆணையருக்கு கருத்துரு அனுப்பப்பட வேண்டும் என அரசால் ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

எருது விடும் விழா நிகழச்சிகளில் ஒரு காளையுடன் உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. மேற்கண்ட இரண்டு நபர்களும், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்த 2 நாட்களுக்கள் கோவிட் தொற்று இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருத்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

முன் அனுமதி பெற்ற எருது விடும் விழா நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்துகொண்டு நிகழ்ச்சி நடத்திட வேண்டும்.

எருது விடும் விழா நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், பார்வையாளர்கள் மற்றும் ஊடகத்துறையைச் சார்ந்தவர்களும், அரசின் நிலையான வழிகாட்டு விதிமுறைகளை கடைபிடித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது விடும் விழா நிகழ்ச்சியை, அரசின் வழிகாட்டுதல்களின் படியும், சிறப்பாக நடத்திட போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News