ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும்போது கதவை பூட்டி உள்ளே இருந்தவர்களால் பரபரப்பு
- அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்கு வாதம்
- மின் இணைப்புகளை துண்டித்து வெளியேற்றினர்
கலசபாக்கம்:
கலசபாக்கம் அடுத்த நார்த் தாம்பூண்டி கிராமத்தில் ஏரி, குளம் ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமித்து 41 குடும்பத்தினர் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றி நீர் நிலைகளை காப்பாற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
அதனை விசாரித்த ஐகோர்ட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் திருவண்ணாமலை குணசேகரன் ஆகியோர் தலைமையில் வருவாய் துறையினரும் போலீசாரும் அங்கு சென்றனர்.
அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 41 வீடுகளை இடிக்கும் பணி 5 பொக்லைன் எந்திரங்கள் மூலம் நடைபெற்றது. அப்போது குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர்கள் அவரவர் வீட்டுக்குள் கதவை சாத்திக் கொண்டு வீடுகளை இடிக்க விடாமல் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சிலர் போலீசாரையும் அதிகாரிகளையும் முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து வீடுகளுக்கு செல்லும் மின் இணைப்புகளை துண்டித்து விட்டு உள்ளே இருந்தவர்களை வெளியேற்றி விட்டு பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றும் பணி தொடர்ந்தது.