உள்ளூர் செய்திகள்

செய்யாறில் வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் நடைபெற்ற விழாவில் தமிழக துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி வரலாற்று ஆய்வாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிய போது எடுத்த படம். அருகில் ஒ.ஜோதி எம்.எல்.ஏ. மற்றும் பலர் உள்ளனர்.

செஞ்சிக் கோட்டைக்கு விரைவில் ரோப் கார் வசதி

Published On 2022-07-31 15:03 IST   |   Update On 2022-07-31 15:03:00 IST
  • செய்யாறில் வரலாற்று ஆய்வு விழா நடந்தது
  • துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தகவல்

செய்யாறு:

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் தொல்லியல் புகைப்பட கண்காட்சி, புத்தகம் வெளியீடு, விருது வழங்குதல் மற்றும் கருத்தரங்கு இருநாள் நிகழ்ச்சி தொடக்க விழா செய்யாறில் நடைபெற்றது.

செய்யாறு பகுதியில் வரலாற்றில் அத்தி, பிரம்மதேசம், கூழமந்தல், குரங்கணில் முட்டம், சீயமங்கலம், வந்தவாசி பகுதியில் வெண்குன்றம், எறும்பூர் ஆகிய 7 நூல்களை தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வெளியிட்டு தொல்லியல் ஆய்வாளர் வீரராகவன், நூல் ஆய்வாளர் விளாரிப்பட்டு ச.கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

வரலாற்று ஆய்வுகள் நமது நாட்டின் கலை, கலாச்சாரம், வாழ்க்கை முறை, வாணிபம் உள்ளிட்ட அரிய தகவல்களை மக்களுக்கு எடுத்துக் கூறும் பெரிய தொண்டாகும். வரலாற்று ஆய்வாளர்களின் உழைப்பினை நாம் தலைவணங்கி பாராட்டிட வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஜவ்வாது மலையில் குள்ளர் குகை 2000 ஆண்டுகளுக்கு பழமையானது வரலாற்று ஆய்வுகளினால்தான் நாம் அறிய முடிகிறது. செய்யாறு அருகே வெம்பாக்கம் தாலுக்காவில் பிரம்மதேசத்தில் ராஜேந்திர சோழன் இறுதி காலத்தில் வாழ்ந்ததை வரலாறுகளின் மூலம் நாம் அறிகிறோம்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் செய்யாறு திருவத்தூர் வேதபுரீஸ்வரர் கோவில்களில் உள்ள கல்வெட்டுகளில் பல அரிய வரலாற்று தகவல்களை அறிய முடிகிறது.

ஆக்ராவில் இருக்கும் தாஜ்மஹாலின் பெருமைகளை நாம் வியந்து பார்க்கிறோம். ஆனால் அருகில் இருக்கும் செஞ்சி கோட்டையின் வரலாற்றினை பார்ப்பதில்லை. செஞ்சி கோட்டை பகுதியில் ரோப் கார் வசதியினை தமிழக முதல்வர் உடனடியாக அமைக்க உரிய கவனம் செலுத்தி ரோப் வசதி ஏற்படுத்தி தருவார் என குறிப்பிட்டார்.

விழாவில் வாழ்த்துரை வழங்கிய ஒ.ஜோதி எம்.எல்.ஏ. பேசுகையில்:-

செஸ் ஒலிம்பியாட் விழாவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் தான் செஸ் போட்டி தோன்றியது என பிரதமரே சுட்டிக்காட்டி பெருமைப்படுத்தினார் என்றால் வரலாற்று ஆய்வுகளினால்தான் நாம் இவைகளை அறிய முடிகிறது என்றார். 

Tags:    

Similar News