சாலையோர ஆக்கிரமிப்புகளால் தொடர் விபத்து ஏற்படுகிறது
- வாகனங்களை நெடுஞ்சாலையிலே நிறுத்திவிட்டு செல்கின்றனர்
- நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
செங்கம்:
திருவண்ணாமலை - செங்கம் தேசிய நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் கடந்து செல்கின்றது. பேருந்துகள், லாரி, கனரக வாகனம், கார், இருசக்கர வாகனம் என பல்வேறு வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி செல்கின்றது.
இந்நிலையில் கொட்டகுளம் கோணாக்குட்டை -கேட், அம்மாபாளையம், இறையூர், பாய்ச்சல், கண்ணக்குருக்கை, கோலாப்பாடி, உள்ளிட்ட பகுதிகளில் சாலை வரை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
கடைகளில் இருந்து வாடிக்கையாளர்கள் சாலையில் அங்கும் இங்கும் கடந்து செல்வதோடு வாகனங்களை நெடுஞ்சாலையிலே நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
மேலும் மாலை நேரங்களில் வழி நெடுகிலும் கடைகள் அமைக்கப்படுவதால் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு வாடிக்கையாளர்கள் கடைக்கு செல்கின்றனர். இதனால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுவது மட்டுமல்லாமல் உயிர் சேதமும் ஏற்படுகிறது.
எனவே சாலையோரம் பொது இடத்தை ஆக்கிரமித்து கடைகள், வீடுகள் கட்டி உள்ளதையும், மாலை நேரங்களில் கடைகள் அமைக்கப்படுவதையும் அப்புறப்படுத்தி வாகன விபத்துகளை தவிர்க்கவும், இனிவரும் காலங்களில் வாகன விபத்துகள் உயிர் சேதம் ஏற்படாமல் இருக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.