பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட காட்சி.
ஆரணியில் பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணா
- சமாதான கூட்டத்திற்கு அதிகாரி வராததால் ஆத்திரம்
- தாசில்தார் பேச்சுவார்த்தை
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பெரியார் நகர் பகுதியில் உள்ள மணியம்மை வீதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் மணியம்மை வீதி அருகே மற்றொரு தரப்பினரின் கல்லறை தோட்டம் அமைந்துள்ளது. மேலும் மணியம்மை வீதி பொதுமக்கள் இந்த கல்லறை தோட்டம் அருகே உள்ள பாதையை 40 ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
ஆனால் கல்லறை தோட்டத்தை பொது வழி பாதையாக பயன்படுத்த கூடாது என்று மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினரும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
மேலும் தற்போது மணியம்மை குடியிருப்பு பகுதியில் மற்றொரு தரப்பு சுவர் அமைத்து பாதையை அடைத்ததாக கூறப்படுகிறது.
அதனால் மணியம்மை பகுதி குடியிருப்பு வாசிகள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரும் சூழ்நிலை ஏற்பட்டதால் பள்ளிக்கு கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாயி வருவதாக குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர்.
மேலும் இது குறித்து குடியிருப்பு வாசிகள் வருவாய்த் துறையினரிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையொடுத்து மணியம்மை வீதி பொதுமக்கள் வழி பாதை சம்பந்தமாக ஆரணி தாசில்தார் அலுவலகத்தில் இரு தரப்பினரிடையே அமைதி பேச்சு வார்த்தை நடத்த வட்டாட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் மணியம்மை பகுதி குடியிருப்பு வாசிகள் பல மணி நேரம் காத்திருந்தும் அதிகாரி வரவில்லை இதனால் ஆத்திரமடைந்த மணியம்மை குடியிருப்பு வாசி பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் சுமார் 3 மணி நேரமாக தாசில்தார் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் வந்த தாசில்தார் ஜெகதீசன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் கூட்டம் நடைபெற்றது. மற்றொரு தரப்பினர் கூட்டத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடதக்கது.