தண்ணீரில் இறந்தவரின் உடலை தூக்கி சென்ற காட்சி.
படவேடு கமண்டல நதியில் இடுப்பளவு தண்ணீரில் இறந்தவரின் உடலை தூக்கி சென்ற அவலம்
- தரைப்பாலம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
- பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என புகார்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படை வீடு ஊராட்சி ராமநாத புரம் கொல்லைமேட்டை சேர்ந்த பரசுராமன் (வயது 40) என்பவர் நேற்று உடல்நல குறைவால் மரணம் அடைந்தார். இவருக்கு சந்திரா (35) என்ற மனைவியும், 9-ம் வகுப்பு படிக்கும் யுவராஜ் (14) என்ற மகனும் உள்ளனர்.
பரசுராமன் உடலை அவ ரது உறவினர்கள் அருகில் உள்ள கமண்டல நதிக்கரையில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்ய கொண்டு சென்றனர். ஆனால் சமீப நாட்களாக பெய்த கனமழை காரணமாக கமண்டல நதியில் செண்பகத்தோப்பு அணைக்கட்டில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் செல்கிறது. இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் ஆற்றில் செல்வதால், கடுமையான சூழலில் ஆற்று நீரில் தவழ்ந்தபடி உடலை கொண்டு சென்றனர். அவர்களுடன் வந்தவர்கள் ஆற்றைக்கடக்க முடியாத தால் மறுகரையிலேயே நின்று விட்டனர்.
இறந்த பரசுராமனில் உறவினரான படவேடு வரலாற்று ஆய்வாளர் அ.அமுல் ராஜ் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:-
இறந்தவரின் உடலை அடக்கம் செய்யும் சடங்கில் பங்கேற்று ஒருபிடி மண்ணைக்கூட போட முடியாத சூழலில் எங்கள் வாழ்க்கை கழிகிறது. இதுகுறித்து பல முறை ஊராட்சி மன்றத்திற்கும், அரசு அதிகாரிகளுக்கும் புகார் செய்தும் பலனில்லை.
பல ஆண்டுகளாக இதேபோன்ற சூழலில்தான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். பலமுறை மனு அளித்தும் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.
மேலும் ராமநாதபுரம் கொல்லைமேடு, மல்லிகாபுரம், கமண்டலாபுரம், தஞ்சான்பாறை, இருளம்பாறை, நடுவூர் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள், பள்ளி செல்லும் மாணவர்களும் இந்த ஆற்றைக் கடந்துதான் ரேணு கொண்டாபுரம் பள்ளிக்கும் வேலூர், ஆரணி ஆகிய இடங் களில் உள்ள கல்லூரிக்கும் சென்று படிக்க வேண்டியுள்ளது.
எனவே கமண்டல நதியில் உடனடியாக தரைப்பாலம் அமைத்து, இப்பகுதி மக்கள் கோரிக்கையை தமிழக அரசும் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.