கட்டண கழிப்பிடங்களை இலவச கழிப்பிடங்களாக மாற்ற வேண்டும்
- நகராட்சி நிர்வாக துறை அமைச்சருக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கடிதம்
- பக்தர்கள் கோரிக்கையை ஏற்று செயல்படுத்த அறிவுறுத்தல்
திருவண்ணாமலை :
திருவண்ணாமலை நகராட்சியால் பராமரிக்கப்படும் கட்டண கழிப்பிடங்கள் இலவச கழிப்பிடங்களாக மாற்றம் செய்ய வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நகராட்சி நிர்வாக துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:- திருவண்ணாமலை நகரம் கோவில் நகரமாக இருப்பதாலும், பவுர்ணமி மற்றும் சித்ரா பவுர்ணமி நாட்களில் சுமார் 8 லட்சம் முதல் 10 லட்சம் வரை ஆன்மீக பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
மேலும் வெளி மாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டினர் அதிகளவில் வருகை தருகின்றனர். எனவே பொது மக்களின் அடிப்படை தேவையான கழிப்பறை வசதியினை நகராட்சியின் அனைத்து கழிப்பிடங்களையும் பொதுமக்கள் முற்றிலும் இலவசமாக பயன்படுத்தி கொள்ள வழிவகை செய்யப்பட வேண்டியது அவசியமாகிறது.
எனவே திருவண்ணாமலை நகராட்சியால் பராமரிக்கப்படும் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலைய உட்புறத்தில் உள்ள நவீன கட்டண கழிப்பறை, ஜோதி மார்க்கெட் நவீன கட்டண கழிப்பறை, ஈசான்யம் பகுதியில் உள்ள கட்டண கழிப்பறைகள் என 15 இடங்களில் உள்ள கழிப்பிடங்களை அப்பகுதி தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் நல்ல முறையில் சுகாதாரமாக பராமரிப்பு செய்வது குறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தலைமையில் உரிய முடிவு எடுக்க கேட்டு கொள்கிறேன்.
எனவே திருவண்ணாமலை நகராட்சியில் 15 இடங்களில் உள்ள கட்டண கழிப்பிடங்களை இலவச கழிப்பிடங்களாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.