- 3 பேரிடம் விசாரணை
- பொதுமக்கள் சாலை மறியல்
வந்தவாசி:
வந்தவாசியை அடுத்த பையூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவன் (வயது 24). இவர் செய்யாறு சர்க்கரை ஆலையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இது குறித்து அவரது உறவினர்கள் கீழ்கொடுங்காலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரில் 3 பேர் தேவனை அடித்து தூக்கிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வந்தவாசி மேல்மருவத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக கூறி போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி மறியலை கை விட்டு கலைந்து செல்லும்படி கூறினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கீழ்பாக்கத்தைச் சேர்ந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக தேவனை வீட்டின் வாசல் முன்பு 3 பேர் சேர்ந்து இரும்பு கம்பியால் தலையில் அடித்து அருகில் இருந்த விவசாய கிணற்றில் வீசிவிட்டு சென்றதாக தெரிகிறது.
இதுகுறித்து கீழ்பாக்கத்தைச் சேர்ந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.