2 வீடுகளில் நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை
- தண்டராம்பட்டு அருகே துணிகரம்
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள பள்ளமோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ரகுவரன் (வயது 35). இவர், தானிப்பாடியில் உள்ள ஒரு சிமெண்டு கடையில் கூலி வேலையும், இவரது மனைவி வரலட்சுமி, வெளியூர் சென்று வளையல் வியாபாரமும் செய்து வருகின்றனர்.
இவர்கள் நிலத்தில் வீடு கட்டி தனியாக வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி க்கொண்டு வேலைக்கு சென்றுள்ள னர்.
மாலையில் வரலட்சுமி வீட்டுக்கு வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 பவுன் நகை, 450 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம கும்பல் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதேபோல் போந்தை கிராமத்தை சேர்ந்தவர் தனக்கோட்டி (55). இவரது மனைவி வள்ளி (52). இவர்கள் இருவரும் வெளியூருக்கு சென்றனர். பின்னர் வீட்டிற்கு வந்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 350 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இந்த சம்பவங்கள் குறித்து தானிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.