உள்ளூர் செய்திகள்

அண்ணாவில் இருந்து இன்று வரை கலை உலகத்தையும் திராவிடத்தையும் பிரித்து பார்க்க முடியாது

Published On 2022-10-30 13:40 IST   |   Update On 2022-10-30 13:40:00 IST
  • அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
  • ஒன்றிய குழு தலைவர்களுக்கு புதிய ஜீப் வாங்கி தர வலியுறுத்தல்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்த மாவட்டம் என்பது திராவிட முன்னேற்ற கழகத்தின் கோட்டை. 1957-ல் முதல் முதலாக தி.மு.க. தேர்தலில் சந்திக்கும் போது 4 சட்டமன்ற உறுப்பினர்களையும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும் பெற்ற மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம். அன்று முதல் இன்று வரை இது கலைஞரின் கோட்டையாகவும், தி.மு.க. கோட்டையாகவும் உள்ளது.

இதுவரைக்கும் திருவண்ணாமலையில் இலை முளைக்கவே இல்லை. 1972-ல் ஆரம்பிக்கப்பட்ட அ.தி.மு.க. என்ற இயக்கத்தில் இருந்து இதுவரைக்கும் திருவண்ணாமலை தொகுதியில் இலை முளைக்கவே இல்லை. தொடர்ந்து சூரியன் தானே. நமது இயக்கம் திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய பரம்பரை, திராவிட இயக்கத்தினுடைய பரம்பரை, திராவிட மாடல் ஆட்சி நடத்தி கொண்டிருக்கும் பரம்பரை.

எங்களுக்கு முதல் பரம்பரை பெரியார், 2-வது பரம்பரை அண்ணா, 3-வது பரம்பரை கலைஞர், 4-வது பரம்பரை தமிழகத்தின் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த இளைஞர்களை, திராவிடர் மொழி உணர்வையும், பகுத்தறிவையும் இன்னும் 50 ஆண்டுகாலத்திற்கு கொண்டு செல்கின்ற பொறுப்பை நீங்கள் (உதயநிதிஸ்டாலின்) எடுத்து உள்ளீர்கள்.

கலை உலகம் ஒவ்வொரு இயக்கத்திற்கும் ஒரு அடையாளம் உண்டு. இந்த இயக்கத்தின் கொள்கையை நாட்டு மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கு அண்ணா கலை உலகத்தை கையில் எடுத்தார்.

அவருக்கு பின்னர் கலைஞர், ஸ்டாலின் ஆகியோரும் இதனை கையில் எடுத்து திராவிட இயக்கத்தின் கொள்கையை மக்களிடம் கொண்டு சென்றனர். அதன் தொடர்ச்சியாக திராவிட நடிகராக உதயநிதி உள்ளார். அண்ணாவில் இருந்து இன்று வரை கலை உலகத்தையும், திராவிடத்தையும் யாராலும் பிரித்து பார்க்க முடியாது. அதற்கு அடையாளம் நீங்கள் தான். திருவண்ணாமலை மாவட்டம் என்ற முகவரியை தந்தவர் தலைவர் கருணாநிதி. அவரது ஆட்சி காலத்தில் தான் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கூட்டுகுடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கிடைத்தது.

இன்றைய முதல்- அமைச்சர் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது 385 ஒன்றியங்களுக்கு ஜீப் வழங்கினார். அந்த ஜீப் தான் இன்றைக்கும் பயன்பாட்டில் உள்ளது.

அதனால் நீங்கள் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி அந்த 385 ஒன்றிய தலைவர்களுக்கு புதிய ஜீப் வாங்கி தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News