உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையில் மாற்றம்?- அமைச்சர் எ.வ.வேலு தகவல்

Published On 2022-06-11 13:49 IST   |   Update On 2022-06-11 13:49:00 IST
  • 36 அரசு துறைகளின் மூலம் 35 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
  • முதலமைச்சர் விழாவின் போது அதிக அளவில் எஸ்.டி. சான்றிதழ் வழங்க நடவடிக்கை

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக முதல்- அமைச்சர் வருகைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார்.

திருவண்ணாமலைக்கு தமிழக முதல்- அமைச்சர் வருகைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி வரவேற்றார்.

கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

திருவண்ணாமலைக்கு வருகிற 22-ந் தேதி தமிழக முதல்- அமைச்சர் வருகை தருவதாக இருந்தது. அதில் சிறிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது. முதல்- அமைச்சர் 21-ந் தேதி வேலூர், திருப்பத்தூர் நிகழ்ச்சியை முடித்து சென்னை செல்கிறார். பின்னர் 2 நாட்கள் கழித்து மீண்டும் சென்னையில் இருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலைக்கு வருகை தர உள்ளார். அன்று காலையில் திருவண்ணாமலையில் அரசு நிகழ்ச்சியை முடித்து விட்டு மாலையில் கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.a

இருப்பினும் தவிர்க்க முடியாத காரணம் ஏற்பட்டால் அதிகபட்சமாக இந்த நிகழ்ச்சி ஒருவாரம் தள்ளி போகலாம். கண்டிப்பாக திருவண்ணாமலைக்கு முதல்- அமைச்சர் வருகை தர உள்ளார்.

எனவே தமிழக முதல்- அமைச்சர் திருவண்ணாமலைக்கு வருவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். முதல்- அமைச்சருக்கான அரசு நிகழ்ச்சி நடைபெற உள்ள இடம் மாவட்ட நிர்வாகத்தினால் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

அந்த இடத்தில் 20 ஆயிரம் பயனாளிகள் அமரும் வகையில் பொதுப்பணித்துறையின் மூலம் பந்தல் அமைக்கப்பட உள்ளது. தற்போது 36 அரசு துறைகளின் மூலம் 35 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இதில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் என அனைத்து பகுதிகளில் இருந்து 20 ஆயிரம் பயனாளிகளை முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்து அவர்களை நலத்திட்ட உதவிகள் வழங்கும் நாளன்று அழைத்து வர தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.

பயனாளிகளுக்கு தேவையான உணவு, குடிநீர் வசதி மேற்கொள்ள வேண்டும். பயனாளிகளை நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு அழைத்து வந்து அமர வைப்பதற்கான பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளை பந்தலின் முன் பகுதியில் அமர வைப்பதற்கான இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். நிகழ்ச்சி நடைபெறும் இடம் அருகில் மருத்துவக்குழு தயார் நிலையில் இருக்க வேண்டும். தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை வேண்டும். ஜெனரேட்டர் வசதியும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இந்த மாவட்டத்தில் எஸ்.டி. சான்றிதழ் தொடர்பாகவும், சுடுகாடு பிரச்சினை தொடர்பாகவும் அதிகளவு மனுக்கள் வருகின்றன. முதலமைச்சர் விழாவின் போது அதிக அளவில் எஸ்.டி. சான்றிதழ் அதிக அளவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுடுகாடு பாதை பிரச்சினையே இல்லாத அளவில் அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்படும் அனைத்து பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட பின்னர் தான் அங்கிருந்து அழைத்து செல்லப்பட வேண்டும்.

திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி. சரவணன், ஓ.ஜோதி, அம்பேத்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், துணை தலைவர் பாரதிராமஜெயம், ஒன்றியக்குழுத் தலைவர்கள் கலைவாணிகலைமணி, பரிமளா கலையரசன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News