விவசாயிகள் ரோட்டில் படுத்து மறியல் செய்த காட்சி.
கலசபாக்கம் அருகே யூரியா தட்டுப்பாட்டால் விவசாயிகள் ரோட்டில் படுத்து மறியல்
- உரக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை என புகார்.
- போக்குவரத்து பாதிப்பு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம், புதுப்பாளையம் துரிஞ்சாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் முழுமையாக விவசாயத்தையும் அதனைச் சார்ந்த கால்நடை வளர்ப்பிலும் மட்டுமே ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் எப்போதும் இல்லாத அளவில் கடந்த 6 மாதங்களாக அதிக அளவு மழை பெய்து ஏரி குளம் குட்டை மற்றும் அணைகளில் நீர் நிரம்பி உள்ளது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் முழுமையாக மூன்று போகமும் பயிர் செய்து வருகின்றனர் .
இதனால் யூரியா தேவையாக இருந்து வரும் நிலையில் கடந்த 10 நாட்களாக கலசப்பாக்கம் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் சென்று யூரியா கேட்கும்போது அதிகாரிகள் ஸ்டாக் இல்லை என கூறுகின்றனர். தனியார் உரகடையில் யூரியாவிற்கு இணையாக ஏதேனும் மருந்து வாங்கினால் மட்டுமே யூரியா கிடைக்கும் அப்படி இல்லை என்றால் 280 ரூபாய் போகக்கூடிய யூரியா மூட்டை 600 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை பில் வழங்காமல் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கடைக்காரர்கள் கூறி வருவதால் விவசாயிகள் வேளாண் துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து முறையிட்டனர் .
இருப்பினும் வேளாண்துறை அதிகாரிகள் கடந்த 10 நாட்களாக எந்த உரகடைக்கும் சென்று ஏன் இப்படி யூரியாவை தாறுமாறாக விற்பனை செய்கிறீர்கள் என்று ஆய்வு மேற்கொள்ளவில்லை.
இதனால் நேற்று மதியம் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் அருகே பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஒரு கட்டத்தில் விவசாயிகள் அனைவரும் ரோட்டில் படுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களை கலசபாக்கம் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர் திருவண்ணாமலை மாவட்டத்தை தவிர பிற மாவட்டங்களில் யூரியா தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் நிலையில் இந்தமாவட்டத்தில் மட்டும் ஏன் இன்னும் யூரியா தட்டுப்பாடு என்று விவசாயிகள் வேதனையுடன் கேள்வி எழுப்பி சென்றனர்.