திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயி குடும்பத்தினர் தர்ணா
- மகனுக்கு போலி டாக்டர் எச்.ஐ.வி. ஊசி போட்டதாக புகார்
- அதிகாரிகள் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே கொளக்கரவாடி அடுத்த ஈச்சங்குப்பம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஒருவர், தனது மனைவி மற்றும் மாற்றுத்திறனாளி மகனுடன் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நேற்று தர்ணாவில் ஈடுபட்டார்.
பின்னர் அவர், தனது 18 வயது மகனின் உடல் நிலை பாதிப்புக்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலையில் உருண்டு புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது செயலை, போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது விவசாயி கூறியதாவது:-
தனது மகனின் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்து வமனைக்கு சிகிச் சைக்காக அழைத்து சென்றோம். அவரது ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோ தனை செய்யப்பட்டது. அதில், மகனுக்கு எச்ஐவி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எங்கள் குடும்பத்தில் வேறு யாருக்கும் எச்ஐவி தொற்று கிடையாது.
2018-ம் ஆண்டு என்னுடைய அனுமதி இல்லாமல், போலி மருத்துவரை அழைத்து வந்து எனது மகனுக்கு கடந்த 2018-ல் உறவினர்கள் ஊசி போட்டுள்ளனர்.
ஊசி போட்ட நபர், போலி மருத்துவர். அவரிடம் கேட்ட போது, காய்ச்சலுக்கு ஊசி போட்டதாக தெரிவித்தார். சொத்து பிரச்சினை காரணமாக, எனது மகனுக்கு போடப்பட்ட ஊசியின் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஊசி போட்டவர் மற்றும் அவரை அழைத்து வந்த உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க மனு அளித்தும் போலீசார், சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை" என்றார். பின்னர் அவர், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினியிடம் மனு அளித்தார். மனுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.