உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலையில் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை குறித்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஓட்டிய போஸ்டர்களை படத்தில் காணலாம்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் போஸ்டர் யுத்தத்தால் பரபரப்பு

Published On 2022-06-19 14:13 IST   |   Update On 2022-06-19 14:13:00 IST
  • போஸ்டரில் அ.தி.மு.க.வை வழி நடத்த வாருங்கள் என வாசகம்.
  • அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம்.

திருவண்ணாமலை:

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பு சென்று கொண்டிருக்கும் வேளையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற வெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தந்தார்.

சேலத்தில் இருந்து வந்த அவருக்கு திருவண்ணாமலை மாவட்ட எல்லை பகுதியான காட்டாம்பூண்டியில் இருந்து ஆரணி வரை அவருக்கு அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் செல்லும் வழியெங்கும் போஸ்டர்களும், பேனர்களும் வைக்கப்பட்டு இருந்தது.

இதில் திருவண்ணாமலையில் வைத்திருந்த பெரும்பாலான பேனர்களில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் படமும், பெயரும் இடம் பெரவில்லை.

மேலும் சில பேனர்களில் ஒற்றை தலைமையே, ஒற்றை தலைமை நாயகரே, பொதுச்செயலாளரே என்று எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டு வைத்திருந்தனர்.

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்த பேனர்களால் திருவண்ணாமலை நேற்று முன்தினம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று திருவண்ணாமலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவளர்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில் கழகத்தின் பாதுகாவலரே ஒற்றை தலைமை ஏற்று கழகத்தை வழி நடத்த வாருங்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த போஸ்டர் யார் ஒட்டியது என்று தெரியாத வகையில் தங்கமகன் ஓ.பி.எஸ். டீம் என்று மட்டுமே குறிப்பிட்டு இருந்தது.

திருவண்ணாமலையில் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை குறித்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தனி, தனியாக ஓட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News