செங்கத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டன
- கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்திற்கு கொண்டு சென்று விடப்பட்டது
- விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
செங்கம்:
செங்கத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை குறித்து மாலைமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து நேற்று பேரூராட்சி ஊழியர்கள் செங்கம் பகுதியில் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றி திரியும் மாடுகளை பிடித்தனர்.
செங்கம் பேரூராட்சிக்குட்பட்ட பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, மெயின் ரோடு, போளூர் ரோடு, ராஜவீதி, பெருமாள் கோவில் தெரு, தளவாநாயக்கன்பட்டை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக மாடுகள் சுற்றி திரிந்து வந்தது.
இந்நிலையில் நேற்று பேரூராட்சி துப்புரவு ஊழியர்கள் மூலம் சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்திற்கு கொண்டு சென்று விடப்பட்டது.
மேலும் போக்குவரத்திற்கு இடையூறு செய்யாத வண்ணம் மீண்டும் மாடுகள் சாலைகளில் சுற்றுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை பேரூராட்சி நிர்வாகம் செய்ய வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இனிவரும் காலங்களில் சாலைகளில் சுற்றும் மாடுகளால் விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் செங்கம் பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் பேரூராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.