நீர்நிலை ஆக்கிரமிப்புகளை பாகுபாடின்றி அகற்ற வேண்டும்
- வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்தது.
- கலெக்டர் முருகேஷ் உத்தரவு
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு களை பாகுபாடுயின்றி அனைத்தையும் அகற்ற அதிகாரிகளுக்கு கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியக்குழு அலுவலக கூட்ட அரங்கில் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார் ஒன்றியக்குழு தலைவர் அன்பரசிராஜசேகர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி மன்ற செயலாளர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளின் வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது கலெக்டர் முருகேஷ் பேசியதாவது கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான பஞ்சாயத்துகளில் கடந்த 2016 -17 ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பசுமை வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு முதல்கட்ட தொகையை 26 ஆயிரம் வழங்கியும் இதுவரைக்கும் பணி நடைபெறாமல் நிலுவையில் உள்ளன.
இப்பணிகளை வரும் ஜூலை 10 தேதிக்குள் தொடங்கி 2 மாதத்திற்கு உள் விரைந்து முடிக்க அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் பயனாளிகளுக்கு இடம் சம்பந்தமான பிரச்சனைகள் எதுவும் இருப்பின் இதற்கு தாசில்தார் உடனடியாக அவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பயனாளிகள் இறந்து இருப்பின் அதற்கு பதிலாக மாற்று பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும். மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து இப்பணியை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தவறும் பட்சத்தில் பயனாளிகள் தாங்கள் பெற்றுள்ள 26 ஆயிரத்தை வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் அரசு பணத்தை பெற்றுக்கொண்டு திட்டத்தை செயல்படுத்தாமல் இருந்தால் அவர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளன.
எனவே பயனாளிகள் உடனடியாக அரசு திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆய்வுக் கூட்டத்தில் பெரும்பாலான ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொள்ளாததற்கு மிகவும் வருத்தமாக உள்ளன.
என்னை சந்திக்க திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கின்றனர் ஆனால் நான் உங்களை நாடி நேரடியாக இங்கே வந்து இருந்தோம் தங்கள் வராதது மிகவும் வேதனையாக உள்ளது.
கலசப்பாக்கம் ஒன்றியத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் பாராபட்சம் பார்க்காமல் அனைத்தையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கடுமையாக உள்ளது.
மேலும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை எக்காரணம் கொண்டும் யாருடைய தலையீடும் இல்லாமல் முழுமையாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சென்னையில் நடைபெற்ற கலெக்டர்கள் ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். அதனால் அதிகாரிகள் இந்த விஷயத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் முருகேஷ் கூறினார்.
அப்போது கலசப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேலு, கோவிந்தராஜூலு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.