சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் பழைய போலீஸ் நிலைய கட்டிடம்
- கட்டிடம் முழுவதும் சிதிலமடைந்துள்ளது
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
தூசி:
வெம்பாக்கம் அடுத்த வந்தவாசி சாலையில் தூசி போலீஸ் நிலையம் உள்ளது. இது 1904-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது.
தூசி, மாமண்டூர், மாத்தூர், சித்தாத்தூர், மாங்கால், சோழவரம், பல்லாவரம், குரங்கணில்முட்டம் உள்ளிட்ட 74 கிராமத்திற்கு உட்பட்டது. தொடக்கத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் மட்டுமே பணியாற்றி வந்தனர்.
இந்தக் கட்டிடம் வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடம் ஆகவும் இருந்து வந்தது. இந்த போலீஸ் நிலைய கட்டிடத்தின் பின்புறத்தில் தூசி சார் பதிவாளர் அலுவலகமும் தொடக்கத்தில் இருந்த செயல்பட்டு வந்தது.
கடந்த 2004-ம் ஆண்டு இந்த போலீஸ் நிலையத்தின் கட்டிடம் நூறாண்டு கடந்ததால் கட்டிடம் முழுவதும் சிதலமடைந்தது.
தூசி போலீஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று கிராம பொதுமக்கள் தரப்பிலும், போலீசார் தரப்பிலும் கோரிக்கை எழுந்தது.
ஒரு வழியாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தூசி போலீஸ் நிலையம், தூசி துரோபதி அம்மன் கோவில் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு அப்போது இந்த இடத்தில் புதிய போலீஸ் நிலையம் கட்டிடம் கட்டப்பட்டது.
இதே போல் தூசி மெயின் ரோட்டில் வந்தவாசி காஞ்சிபுரம் சாலையில் சார் பதிவாளர் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கண்ட இரு அலுவலகங்களும் புதிய கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டது 2006 -ம் ஆண்டு மாங்கால் கூட்டு ரோட்டில் 4200 ஏக்கர் பரப்பளவில் செய்யாறு சிப்காட் தொழிற் பூங்கா தொடங்கப்பட்டது.
ஆனால் இந்த 2 அலுவலகங்களும் செயல்பட்டு வந்த பழைய கட்டிடம் கேட்பாரற்ற நிலையில் பாழடைந்து உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இந்த கட்டிடம் சமூக விரோதிகளின் கூடாரமாக இருந்து வருகிறது. பகல் நேரங்களில் மது பிரியர்கள் அட்டகாசம் பொதுமக்களின் முகம் சுளிக்க வைக்கிறது.
பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தூசி பழைய போலீஸ் நிலைய கட்டிடம் முறைப்படி இடித்து தள்ளிவிட்டு இந்த இடத்தை வேறு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையாகவே உள்ளது.