தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பயிற்சி கட்டிடம் அமைக்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு
- அக்ரி. கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தகவல்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
போளூர் ஒன்றியத்தில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான கட்டிடம் அமைக்க தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
போளூர் ஒன்றியம் வெள்ளூர் கிராமத்தில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான மையம் செயல்பட்டு வந்தன.
தற்போது அங்கு போதுமான கட்டிட வசதி இல்லாத காரணத்தால் போளூர் புறவழிச்சாலை ஆர். குன்னத்தூர் பகுதியில் மக்கள் சுகாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சி பாதுகாப்பு சார்பில் இப்பயிற்சி மையம் தொடங்க விழா நடைபெற்றது.
விழாவில் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி மையத்தை திறந்து வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில் போளூர் ஒன்றியத்தில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வெள்ளூர் கிராமத்தில் தசை சிதைவு பயிற்சி மையம் அமைக்கப்பட்டது.
தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர சிகிச்சைகள் எதுவும் இல்லை ஆனால் அவர்களுக்கு உரிய பயிற்சி மட்டும் அளிக்க முடியும் இதற்காக தேவையான உபகரணங்களை கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேவையான பயிற்சி உபகரணங்களை வழங்கினார்.
இதன் மூலம் போளூர் தொகுதியில் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயிற்சி பெற்று வந்தனர்.
தற்போது அங்கு போதுமான கட்டிட வசதி இல்லாத காரணத்தால் இவை தற்காலிகமாக போளூர் பைபாஸ் சாலையில் பயிற்சி மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த பயிற்சி மையத்திற்கு தேவையான கட்டிடம் கட்டுவதற்காக போளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விரைவில் இப்பணிகள் முடிக்கப்பட்ட உள்ளன இதன்மூலம் போளூர் தொகுதியில் உள்ள தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் பயனடைவார்கள் என பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி, கல்வி வளர்ச்சி பாதுகாப்பு நிறுவனர் குமரவேல் ஊராட்சி மன்ற தலைவர் தீபா கலைவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.