உள்ளூர் செய்திகள்

கிரிவலப் பாதையில் மர சிற்பங்கள் சீரமைப்பு

Published On 2022-11-21 15:07 IST   |   Update On 2022-11-21 15:07:00 IST
  • சேதமடைந்த 8 சிற்பங்கள் அகற்றப்பட்டது
  • தீபத் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பட்டுபோன மரங்களில், பல்வேறு வடிவங்களில் மொத்தம் 63 மர சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டன.

இது கிரிவலம் செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களை கவர்ந்தது. இந்த மர சிற்பங்கள் நெடுஞ்சாலைத்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

மழை, வெயிலால் மர சிற்பங்கள் சேதமடைந்து வந்தாலும் அவை நெடுஞ்சாலைத்துறை மூலம் சீரமைக்கப்பட்டு வருகின்றன. கிரிவலப்பாதையில் வடிவமைக்கப்பட்டு இருந்த 63 மரசிற்பங்களில் 8 மர சிற்பங்கள் முற்றிலும் சேதமடைந்து அகற்றப்பட்டது.

இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்க உள்ள நிலையில் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் தீபத் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கிரிவலப்பாதையில் உள்ள மர சிற்பங்கள் சீரமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை மூலம் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதனை சீரமைக்கும் பணியில் சிற்பங்களை வடிவமைத்த சிற்பி மதுரை மணிகண்ட ராஜா தலைமையில் 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News