நட்சத்திர கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை
- சரவணன் எம்.எல்.ஏ. அதிகாரிகளுக்கு உத்தரவு
- கிரிவலப்பாதையில் குட்டை போல் தண்ணீர் தேங்கியிருந்தது.
திருவண்ணாமலை:
எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் மலை சுற்றும் பாதையில் மழை நீர் தேங்கி வெளியில் செல்ல விடாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சரவணன் எம்.எல்.ஏ. உத்தரவிட்டுள்ளார்.
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவிலில் ஆடி கிருத்திகை விழாவையொட்டி பல்வேறு முன்னேற்பாடு பணிகளை கலசப்பாக்கம் சரவணன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
அப்போது கோவிலின் அடிவாரத்தில் உள்ள குளத்தை பார்வையிட்டு மலை உச்சிக்குச் சென்று காவடி எடுத்து வரும் பக்தர்களுக்கு தனி வழி பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தனி வழி என அனைத்தையும் பார்வையிட்டார். பின்பு மலையை சுற்றி வரும் கிரிவலப் பாதையும் பார்வையிட்ட போது ஆங்காங்கே மழை நீர் தேங்கி குட்டை போல் இருந்தன.
இதனை உடனடியாக தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவிலில் சுற்றி உள்ள கிரிவலை பாதை முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தாசில்தார் மற்றும் அதிகாரிகளிடம் ஆடி கிருத்திகை விழா முடிந்தவுடன் அனைத்தையும் உடனடியாக அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார்.
ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு கொரோனா தடுப்பூசிகள் போடும் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு சென்ற எம்எல்ஏ இதுவரை எத்தனை பேர் இங்கு தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள் என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது மருத்துவ குழுவினர் இதுவரை யாரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வரவில்லை என்று பதில் அளித்தனர். உடனே பூஸ்டர் தடுப்பூசியை எனக்கு போடுங்கள் என்று உட்கார்ந்தார். எம்.எல்.ஏ. போட்டு எழுந்தவுடன் உடன் வந்திருந்த கட்சியினர் 30-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.
இதனை அங்கிருந்து வேடிக்கை பார்த்த பொதுமக்களில் 20க்கும் மேற்பட்டோர் ஒரு மணி நேரத்தில் சுமார் 50 பேர் 2 தவணை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்.
நிகழ்சியில் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் ஹரிஹரன், தாசில்தார் தட்சிணாமூர்த்தி, மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் முருகன் உட்பட பலர் உடனிருந்தனர்.