உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

ஆர்டர்கள் தாமதமாக வழங்கப்பட்டதால் தீபாவளி சேலைகளை தயாரிக்க முடியாமல் திணறும் நெசவாளர்கள்

Published On 2022-10-18 05:09 GMT   |   Update On 2022-10-18 05:09 GMT
  • சேலை நெசவு செய்து தர தமிழக அரசின் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் ஆர்டர் வழங்கப்படுவது வழக்கம்.
  • தீபாவளி சேலை ஆர்டர் ரூ.1 கோடிக்கு கடந்த மாதம் ஆர்டர் வழங்கப்பட்டது.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு வருடம் தோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலை நெசவு செய்து தர தமிழக அரசின் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் ஆர்டர் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தாமதமாக தீபாவளி சேலை ஆர்டர் வழங்கப்பட்டதால் அதனை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியாமல் கைத்தறி நெசவாளர்கள் திணறி வருகின்றனர்.

இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் சொக்கப்பன் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருடம் தோறும் கணபதிபாளையம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கு சேலை நெசவு செய்து தர கோ -ஆப்டெக்ஸ் நிறுவனம் தீபாவளி பண்டிகைக்கு 3 மாதங்களுக்கு முன்பே ரூ. 4 கோடி வரை ஆர்டர் கொடுக்கும். இதனால் நாங்களும் தீபாவளிக்கு முன்பே சேலை நெசவு செய்து வழங்கிவிடுவோம். ஆனால் இந்த வருடம் தீபாவளி சேலை ஆர்டர் ரூ.1 கோடிக்கு கடந்த மாதம் ஆர்டர் வழங்கப்பட்டது. ஆர்டர் குறைவால் இந்த சங்கத்தை சேர்ந்த 450 கைத்தறி நெசவாளர்களுக்கு வருமான இழப்பு ஒரு புறம் இருந்தாலும் காலதாமதமாக கொடுத்த ஆர்டரை தீபாவளிக்குள் முடித்து தரமுடியாமல் கைத்தறி நெசவாளர்கள் திணறி வருகின்றனர்.

ஒரு கைத்தறியில் ஒரு சேலை நெசவு செய்திட 3 முதல் 4 நாட்கள் ஆகும். இனி வரும் காலங்களில் பண்டிகை கால ஆர்டர்களை முன்கூட்டியை வழங்க வேண்டும். மேலும் கணபதிபாளையம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் அதிகபடியான கைத்தறி நெசவாளர்கள் உறுப்பினர்களாக இருப்பதால் இந்த சங்கத்திற்கு அரசு அதிக சேலை ஆர்டர் வழங்க வேண்டும் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News