உள்ளூர் செய்திகள்

அமராவதி அணை.

குடிநீர்-பாசனத்திற்காக உடுமலை அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

Published On 2023-06-30 10:37 GMT   |   Update On 2023-06-30 10:37 GMT
  • திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
  • 380.16 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.

உடுமலை:

உடுமலை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதிஅணை உள்ளது.அணைக்கு மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற தேனாறு, பாம்பாறு,சின்னாறு உள்ளிட்டவை பிரதான நீராதாரங்களாக உள்ளன .அவற்றின் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது. அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இன்னும் தொடங்கவில்லை. இதன் காரணமாக பாசன பரப்புகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. அத்துடன் அமராவதி ஆறு பிரதான கால்வாயை ஆதாரமாக கொண்ட குடிநீர் திட்டங்களும் முடங்கும் சூழல் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து அமராவதிஆறு, பிரதான கால்வாய் பாசனப்பகுதியில் கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றவும், குடிநீர் தேவையை போக்கவும் தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் அதிகாரிகள் தண்ணீர் திறப்பதற்கு உண்டான கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர். அதன் பேரில் அரசு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது.

அமராவதி ஆற்றை பிரதானமாக கொண்டுள்ள 10 வாய்க்கால் பாசனப்பகுதிகளில் உள்ள பயிர்களை காப்பாற்றும் வகையிலும் குடிநீர் தேவைக்காகவும் 1002.24 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அதேபோன்று பிரதான கால்வாயை ஆதாரமாகக் கொண்ட புதிய பாசன பகுதியில் உள்ள பயிர்களை காப்பாற்றும் வகையிலும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் 380.16 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நேற்று அமராவதி அணையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பொத்தானை அழுத்தி தண்ணீர் திறந்து வைத்தனர். அதைத் தொடர்ந்து அமராவதி ஆற்று சட்டர்கள் மற்றும் பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது.அதில் அனைவரும் மலர் தூவி வரவேற்றனர்.

ஜூலை 9-ந் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.இதன் மூலம் பாசன பெறுகின்ற பழைய வாய்க்கால்களில் 21 ஆயிரத்து 867 ஏக்கரும் பிரதான கால்வாய் மூலம் பாசனம் பெறுகின்றன. புதிய பாசனத்தில் 25 ஆயிரத்து 250 ஏக்கரும் என மொத்தம் 47ஆயிரத்து 117 ஏக்கர் நிலங்கள் பயன் பெறுகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், உடுமலைஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன்,ஒன்றிய செயலாளர்கள் செழியன், செந்தில்குமார்,எஸ்.கே.தங்கராஜ் என்ற மெய்ஞானமூர்த்தி, உடுமலை நகர மன்ற தலைவர் மத்தீன், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News