உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

உடுமலை கடை வீதிகளில் சரக்கு வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி

Published On 2023-06-08 08:08 GMT   |   Update On 2023-06-08 08:08 GMT
  • வாகன போக்குவரத்துக்கு ஏற்றவாறு இணைப்பு மற்றும் பிரதான சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
  • சாலைகளில் தொடர்ந்து போக்குவரத்து இருந்து கொண்டே உள்ளது.

உடுமலை :

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வாகன போக்குவரத்துக்கு ஏற்றவாறு இணைப்பு மற்றும் பிரதான சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக பொதுமக்கள் பல்வேறு விதமான தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர். ஆனால் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருவதும் தொடர் கதையாக உள்ளது.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- பல்வேறு விதமான சேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நகரம் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் நகரப்பகுதிக்கு வர வேண்டி உள்ளது. இதனால் சாலைகளில் தொடர்ந்து போக்குவரத்து இருந்து கொண்டே உள்ளது. ஆனால் பிரதான சாலைகளை ஆக்கிரமிக்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதும் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்காததும் அதற்கு காரணமாகும். குறிப்பாக சத்திரம் வீதியில் பொருட்களை இறக்குவதற்காக வருகின்ற வாகனங்கள் சாலை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து நிறுத்தப்படுகிறது. அதே போன்று வ.உ.சி வீதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலை சீரமைக்காமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.இது போன்ற பல்வேறு காரணங்களால் உடுமலை பகுதி பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.மேலும் பொருட்களை இறக்குவதற்காக வருகின்ற கனரக வாகனங்கள் பகல் நேரங்களில் நகரப் பகுதிக்குள் வரக்கூடாது என்ற விதி இருந்தும் அதை முறையாக பின்பற்றுவதில்லை. ஒரு சிலர் செய்யும் தவறுகளால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதிப்படுவது வேதனை அளிக்கிறது. எனவே உடுமலை நகரப் பகுதிக்குள் பிரதான சாலைகளில் நிலவி வருகின்ற போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும்.மேலும் கனரக வாகனங்களை பகல் நேரத்தில் பிரதான சாலைகளில் நிறுத்தி பொருட்களை இறக்குவதற்கும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News