உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

ஆடுகளுடன் சுற்றிய வரையாடு பொதுமக்களை தாக்கியதால் ராஜமலையில் விட்ட வனத்துறை

Published On 2023-07-31 05:06 GMT   |   Update On 2023-07-31 05:06 GMT
  • 2021ம் ஆண்டு, மாங்காபாறை வனப்பகுதியில் ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்த போது ஆட்டுக்கூட்டத்துடன் வரையாடு ஒன்று சேர்ந்தது.
  • கடந்த ஏப்ரல் மாதம் முதல் அதன் இயல்புகளில் மாற்றம் ஏற்பட்டது.

உடுமலை:

கேரளா மாநிலம் சின்னாறு வன உயிரின காப்பகம், மறையூர், காந்தலூர், பாலப்பட்டி, மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்தவர்கள் ஆடுகள் வளர்த்து வருகின்றனர். கடந்த 2021ம் ஆண்டு, மாங்காபாறை வனப்பகுதியில் ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்த போது ஆட்டுக்கூட்டத்துடன் வரையாடு ஒன்று சேர்ந்தது.

இரு ஆண்டுகளாக ஆடுகளுடன் சேர்ந்து, மேய்ந்தும், இரவு நேரங்களில் பட்டிகளில் அவற்றுடனே உறங்கி, கிராமத்திற்குள் வளர்க்கும் ஆடு போல் மாறியது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அதன் இயல்புகளில் மாற்றம் ஏற்பட்டது.

ஆடுகளை தாக்குவது, மனிதர்களை தாக்குவது என தொடர்ந்து பிரச்னையை ஏற்படுத்தியது. வரையாடு தாக்கிய சம்பவங்களில் 8 பேர் காயமடைந்தனர். இதில், 2பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெறுகின்றனர்.மனிதர்களை தாக்கிய வன விலங்கான வரையாட்டை பிடிக்க வேண்டும் என, கிராம வனக்குழு தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட வன அலுவலருக்கு பரிந்துரை செய்தனர்.

இதனையடுத்து கேரளா வனத்துறையினர், வலை வீசி வரையாட்டை பிடித்து கூண்டுக்குள் அடைத்து, வரையாடு தேசிய பூங்காவான ராஜமலைக்கு கொண்டு சென்று விடுவித்தனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ஆண் வரையாடு குட்டியாக இருந்த போது, மற்ற ஆடுகளுடனும், மக்களுடனும் சகஜமாக இருந்துள்ளது. தற்போது 3 ஆண்டுகள் வளர்ந்த நிலையில் இனப்பெருக்கம் மற்றும் அதன் கூட்டத்தை தேடியுள்ளது.

அதனை பாதுகாப்பாக பிடித்து ராஜமலையில் வரையாடுகள் கூட்டத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது என்றனர்.

Tags:    

Similar News