உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

ஆர்கானிக் உணவுப்பொருட்கள் விற்பனை - உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு

Published On 2023-04-17 07:24 GMT   |   Update On 2023-04-17 07:24 GMT
  • இயற்கை உணவுப் பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
  • போலியாக தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

தாராபுரம் :

ஆர்கானிக் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் அதற்கான முத்திரை, உணவுப்பாதுகாப்பு உரிமம் ஆகியவற்றை கவனித்து வாங்க உணவுப்பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் பலர் ஆர்கானிக் எனும், இயற்கை உணவுப் பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி இயற்கை உணவுப் பொருட்கள் என்ற பெயரில், போலியாக தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு உணவுப்பொருள் நிஜமாகவே இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டதா என்பதை கண்டறிய தெரியாத வாடிக்கையாளர்களே, இது போன்ற நிறுவனங்களின் இலக்கு.

பொதுமக்கள் மீது சுமத்தப்படும் இந்த மோசடி வியாபாரத்தை தடுக்க கடைகளில் உணவுப்பாதுகாப்பு துறை ஆய்வு நடத்தி வருகிறது. இந்நிலையில் ஆர்கானிக் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் அதற்கான முத்திரை, உணவுப்பாதுகாப்பு உரிமம் ஆகியவற்றை கவனித்து வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், வேளாண் துறையுடன் இணைந்து, 'ஆர்கானிக்' உணவுப் பொருட்களின் உற்பத்தி முறைகள், பரிசோதனை முறைகள், விற்பனை குறித்து உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.பொதுமக்கள் ஆர்கானிக் பொருட்கள் வாங்கும் போது போலிகளை தவிர்க்க ஆர்கானிக் முத்திரை, உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு எண் லேபிளில் உள்ளதா என்பதை உறுதி செய்து பின்னரே வாங்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News