திருப்பூர் ரெயில் நிலைய சரக்கு முனையத்தில் சீரமைப்பு பணிகள் தொடக்கம்
- கூட்ஸ் ஷெட் பிளாட்பார்ம் கட்டமைப்பு பணி நடப்பதால் ரெயில் நிறுத்தம், சரக்குகளை இறக்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
- லாரியை நிறுத்தி சரக்கு இறக்க ஏதுவான இடத்தில் பெட்டிகள் மாற்றி நிறுத்தப்படுகிறது.
திருப்பூர் :
நூற்றாண்டு பழமை வாய்ந்த திருப்பூர் ரெயில் நிலையம் கூட்ஸ் ஷெட் சீரமைப்பு பணியை தெற்கு ரெயில்வே கட்டுமானப்பிரிவினர் தொடங்கி உள்ளனர். பல ஆண்டுகள் கடந்த கற்கள், மணல் முற்றிலும் பெயர்த்தெடுக்கப்பட்டு புதிதாக கம்பி கட்டி கான்கிரீட் சுவர் போன்ற அமைப்புடன் பிளாட்பார்ம் அமைக்கப்பட உள்ளது.
வழக்கமாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் சரக்கு ரெயில்கள் ஈரோடு - கோவை மெயின் லைனில் இருந்து கூட்ஸ் ஷெட் பிளாட்பார்முக்கு செல்லும் வகையில் சிக்னல் வழங்கப்படும். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சரக்கு ரெயில்கள் வரும் போது, கூட்ஸ் ஷெட்டில் உள்ள மாற்று தண்டவாளத்திலும் சரக்கு ரெயில் நிறுத்தப்படும்.
சரக்குடன் ரெயில்பெட்டிகள் நிற்பதை தவிர்க்க ரெயில் பிளாட்பார்ம் வந்த 24 முதல் 36 மணி நேரத்தில் சரக்குகளை இறக்கி செல்ல வேண்டிய பகுதிகளுக்கு அனுப்பப்படும். தற்போது கூட்ஸ் ஷெட் பிளாட்பார்ம் கட்டமைப்பு பணி நடப்பதால் ரெயில் நிறுத்தம், சரக்குகளை இறக்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
ஒரே நேரத்தில் அனைத்து பெட்டிகளில் இருந்து சரக்கு இறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மெயின் டிராக்கில் வரும் ரெயில்களை பிளாட்பார்ம்மை ஒட்டியுள்ள கூட்ஸ் ஷெட் டிராக்கில் நிறுத்த முடியாமல் மாற்று தண்டவாளத்தில் நிறுத்தப்படுகிறது.
பணி நடக்கும் இடத்துக்கு ரெயில் முன்னேறி செல்லாமல் இருக்க தடுப்புகள் நடப்பட்டுள்ளது. சரக்கு ரெயிலின் ஒரு பகுதியை (பாதி பெட்டிகளை பிரித்து) மாற்று தண்டவாளத்திலும், மீதியை பிளாட்பார்ம் பணி நடக்காத இடத்திலும் நிறுத்தி வைக்கின்றனர். லாரியை நிறுத்தி சரக்கு இறக்க ஏதுவான இடத்தில் பெட்டிகள் மாற்றி நிறுத்தப்படுகிறது.