உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

நில புரோக்கர் போல் நடித்து மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு - 3 பேர் கைது

Published On 2023-08-02 05:51 GMT   |   Update On 2023-08-02 05:51 GMT
  • பாலகிருஷ்ணன் வெளியில் சென்று விட்டார். இதனால் சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
  • புரோக்கர்கள் போல் நடித்து நகை பறிக்கும் கும்பல் என தெரியவந்தது

ஊத்துக்குளி:

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 60). இவர் தனது மகன் பாலகிருஷ்ணனுடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மதியம் பாலகிருஷ்ணன் வெளியில் சென்று விட்டார். இதனால் சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த 3 பேர் சரஸ்வதியிடம் இப்பகுதியில் இடம் விற்பனைக்கு உள்ளதா? என நில புரோக்கர்கள் போல் விசாரித்துள்ளனர்.

சரஸ்வதி அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது திடீரென அவர்களில் ஒருவர் சரஸ்வதி அணிந்திருந்த 5 பவுன் சங்கிலி மற்றும் ¼ பவுன் கம்மல் ஆகியவற்றை பறித்தார். பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அப்போதுதான் அவர்கள் நில புரோக்கர்கள் இல்லை என்பதும், புரோக்கர்கள் போல் நடித்து நகை பறிக்கும் கும்பல் என தெரியவந்தது.

இது குறித்து சரஸ்வதி அளித்த புகாரின் பேரில் ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சரஸ்வதியிடம் நகையை பறித்து சென்றவர்கள் ஊத்துக்குளி கொடியம்பாளையத்தை சேர்ந்த அன்பரசன் (30), அவரது நண்பர்களான ஈரோடு மாவட்டம் வெள்ளோடு சிறுவன் காட்டுவலசை சேர்ந்த தாமரைக்கண்ணன் (41),ஈரோடு மாவட்டம் காசிபாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த அறிவழகன் (42) என தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News