உள்ளூர் செய்திகள்

கறிக்கோழி பண்ணை.

கறிக்கோழி கொள்முதல் விலை சீராக உள்ளதால் பல்லடம் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி

Published On 2023-06-26 09:57 IST   |   Update On 2023-06-26 09:57:00 IST
  • சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
  • கறிக்கோழி தொழில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது

பல்லடம்: 

பல்லடம் வட்டாரத்தில் விவசாயத்திற்க்கு மாற்றுத் தொழிலாக வந்த கோழிப்பண்ணைத்தொழில் தற்பொழுது முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. கோழிப்பண்ணை த்தொழில் இரண்டு வகையானது. முட்டைக்காக வளர்க்கப்படும் முட்டைக்கோழி ஒரு வகை, மற்றொன்று கறிக்கோழி வகை.

பல்லடம் பகுதியில் பண்ணையாளர்கள் அதிக அளவில் கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கறிக்கோழி நுகர்வை பொறுத்து இதன் விற்பனை விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.

இந்தநிலையில் தீவனங்கள் விலை உயர்வு, வளர்ப்பு கூலி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளால் கடந்த சில மாதங்களாக கறிக்கோழி விலை சரிவை சந்தித்தது. தற்போது நிலைமை இயல்பு நிலையில் உள்ளதாகவும், கறிக்கோழி கொள்முதல் விலை சீராக உள்ளதாகவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து கறிக்கோழி பண்ணையாளர் ஒருவர் கூறியதாவது:-

கடந்த மாதங்களில் கறிக்கோழி தொழில் சரிவை சந்தித்தது. இதனால் கறிக்கோழி தொழில் சார்ந்த உற்பத்தியாளர்கள் மற்றும் பல ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது கறிக்கோழி உற்பத்தி குறைப்பு நடவடிக்கையால் கறிக்கோழி தொழில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. கறிக்கோழி கொள்முதல் விலையும் சீராக உள்ளது. இவ்வாறு கூறினார். இன்றைய கறிக்கோழி கொள்முதல் விலை 128 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News