உடுமலை நாராயணகவி மணி மண்டபத்தில் பொது அறிவு புத்தகங்களை அதிகப்படுத்த கோரிக்கை
- நாள்தோறும் ஏராளமான போட்டி தேர்வர்கள் வருகை தந்து குறிப்பு எடுத்து தயாராகி வருகின்றனர்.
- போட்டித் தேர்வில் வெற்றி பெற்று செல்லும் தேர்வர்கள் புத்தகங்களை வாங்கி கொடுத்து உதவ வேண்டும்.
உடுமலை:
உடுமலை குட்டை திடலில் நாராயணகவி மணிமண்டபம் உள்ளது .இங்கு போட்டி தேர்வுக்கு தயாராகும் வகையில் பொது அறிவு, நடப்பு நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு வகையான புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. நாள்தோறும் ஏராளமான போட்டி தேர்வர்கள் வருகை தந்து குறிப்பு எடுத்து தயாராகி வருகின்றனர். ஆனால் போட்டி தேர்வு புத்தகங்கள் பற்றாக்குறை, செய்தித்தாள்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் முழுமூச்சில் தேர்வுக்கு தயாராக இயலாத நிலை உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மக்களுக்கு சேவையாற்ற அரசுப்பணியில் அமர வேண்டும் என்ற நோக்கத்தோடு முழுமூச்சாக தேர்வர்கள் தயாராகி வருகின்றனர். ஆனால் தற்போதைய நிலையில் சுமார் 2 ஆயிரம் புத்தகங்களே உள்ளது. போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றால் பல்வேறு தலைப்புகளில் 5 ஆயிரம் புத்தகங்களுக்கு மேல் இருக்க வேண்டும். புத்தகங்கள் பற்றாக்குறையாக இருப்பதால் தேர்வில் பின்னடைவை சந்திக்க வேண்டிய நிலைமை உள்ளது. அதுமட்டுமின்றி நாராயணகவி வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் எழுதிய புத்தகங்கள் சொற்ப அளவில் மட்டுமே உள்ளது. அதையும் அதிகப்படுத்த வேண்டும்.
மேலும் குழந்தைகளுக்கான சிறுகதை புத்தகங்கள் முற்றிலுமாக இல்லை. அதுமட்டுமின்றி நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொள்ளும் வகையில் செய்தித்தாள்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டியதும் அவசியமாகும். எனவே நாராயணகவி மணிமண்டபத்தில் போட்டி தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களின் நலன் கருதி புத்தகங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அதே போன்று போட்டித் தேர்வில் வெற்றி பெற்று செல்லும் தேர்வர்கள் புத்தகங்களை வாங்கி கொடுத்து உதவ வேண்டும். இதனால் இளைய தலைமுறையினர் பயன் பெறுவதற்கு ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்தனர்.